இலங்கைக்காக எப்போதும் இந்தியா முன்னிற்கும் – இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு நெருக்கடி வேளையிலும் இந்தியா எப்போதும் அந்நாட்டுடன் உறுதியாகத் துணைநிற்கும் என இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தனது கன்னி விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்தடைந்த அவர், 08.09.2026 அன்று கொழும்பில் நடைபெற்ற இந்திய வம்சாவளி மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளே இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்தியாவின் அதிவேகப் பொருளாதார மாற்றம் குறித்துச் சுட்டிக்காட்டிய பாதுகாப்பு அமைச்சர், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த பத்து வருடங்களில் இந்தியாவின் பொருளாதாரம் 2 ட்ரில்லியன் டொலரிலிருந்து சுமார் 4 ட்ரில்லியன் டொலராக இரட்டிப்படைந்துள்ளதுடன், 2026-2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மேலும், சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி 79 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், மொபைல் போன் உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், 12 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 600 கோடியாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி தற்போது ரூ. 39,000 கோடி எனும் வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், இந்தியப் பாதுகாப்பிற்காக வரவுசெலவுத் திட்டத்தில் ரூ. 7.25 இலட்சம் கோடி உயர்த்தப்பட்டுள்ளமை, சுயசார்புப் பாதுகாப்புத் துறையை நோக்கிய பயணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. மேலும், கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 25 கோடி இந்திய மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், இலங்கையின் அமைச்சரவை அமைச்சர் சரோஜா சாவிதிரி போல்ராஜ், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய சிவில் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects