முன்மொழியப்பட்ட பெரும்போகத்தில் நெற் பயிர்ச்செய்கை பணிகளைத் தொடங்குவதற்கான கால அட்டவணை!

2026/27 ஆம் ஆண்டின் பெரும்போகத்தில் நெற் பயிர்ச்செய்கை பணிகளைத் தொடங்குவதற்கான கால அட்டவணை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நீர் வளத்தை திறம்பட நிர்வகிக்கும் நோக்கில், மண்டல வாரியாக பயிர்ச்செய்கை பணிகளைத் தொடங்குவதற்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதன்படி, வளவை மண்டலத்தில் ஒக்டோபர் 01 ஆம் திகதியும், எல மண்டலத்தில் ஒக்டோபர் 15 ஆம் திகதியும் பயிர்ச்செய்கை பணிகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், கவுடுல்ல மண்டலத்தில் நவம்பர் 01 ஆம் திகதியும், எலஹெர மண்டலத்தில் நவம்பர் 10 ஆம் திகதியும் பயிர்ச்செய்கை பணிகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் முதல் அடுத்த ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் குறைந்த அளவே மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், நீரை அதிகபட்சமாக மேலாண்மை செய்வதற்கு ஒக்டோபர் மாத தொடக்கத்தில் நெற் பயிர்ச்செய்கை பணிகளைத் தொடங்குவது மிகவும் பொருத்தமானது என நீர் மேலாண்மை செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, எல்நினோ சூழ்நிலையினால் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் விவசாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அது குறித்து கவனம் செலுத்தி விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கை பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவதன் முக்கியத்துவத்தை வளிமண்டலவியல் திணைக்களமும் சுட்டிக்காட்டியுள்ளது.

வரவிருக்கும் பெரும்போகத்தில் நெற் பயிர்ச்செய்கைக்கு தேவையான போதிய உரம் கையிருப்பில் உள்ளதாக தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ள அதேவேளை, நாட்டிற்குத் தேவையான அளவு விதை நெல் உள்ளதாக விவசாயத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இம்முறை பெரும்போகத்தில் 8 லட்சம் ஹெக்டேரில் நெற் பயிர்செய்கை செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இதற்கிடையில், தொழில்நுட்பப் பரிந்துரைகளுக்கு அமைவாக உரிய நேரத்தில் பயிர்ச்செய்கை பணிகளைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தை விவசாய, கால்நடை, நில மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த வலியுறுத்தியுள்ளார்.

விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்பப் பொதிகளைப் பின்பற்றுவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதுடன், அது தொடர்பான விழிப்புணர்வு திட்டங்களைச் செயற்படுத்துவதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2026/27 பெரும்போகத்தின் பயிர்செய்கை பணிகளைத் திட்டமிடுவது தொடர்பான இந்த முன்ஆயத்தக் கலந்துரையாடல், அமைச்சர் கே.டி.லால் காந்த தலைமையில் 08.09.2026 அன்று கொவிஜன அரங்கில் நடைபெற்றது.

வளிமண்டலவியல் திணைக்களம், நீர் மேலாண்மை செயலகம், நீர்ப்பாசனத் திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை, விவசாயத் திணைக்களம், விவசாயத் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தேசிய உரச் செயலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

விவசாய மற்றும் கால்நடைப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவிக்கையில், இது ஒரு முன்ஆயத்தக் கலந்துரையாடல் மட்டுமே என்றும், குறித்த முன்மொழிவுகள் தொடர்பான இறுதித் தீர்மானம் செப்டம்பர் 18 ஆம் திகதி கன்னோருவையில் நடைபெறும் இறுதிச் சந்திப்பின் போதே எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects