ஆறுகளின் நீர் மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

நாட்டின் பல பிரதான ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்ட போதிலும், தற்போது எந்தவொரு ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பல பிரதான ஆற்றுப் படுகைகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

கின் கங்கையின் கீழ் பகுதியில் உள்ள பத்தேகமவுக்கு அருகாமையிலுள்ள சில இடங்களில் சுமார் 125 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

களு கங்கையின் மேல் படுகையில் இரத்தினபுரிப் பகுதியில் சுமார் 75 மி.மீ மழைவீழ்ச்சியும், கீழ் படுகையில் கெஸ்பேவவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் சுமார் 100 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் சுமார் 75 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அனுராதபுர மாவட்டத்தின் சில இடங்களில் சுமார் 40 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதே வேளை, கொழும்புக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் சுமார் 100 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மகாவலி கங்கையின் மேல் படுகைக்குட்பட்ட பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சூழவுள்ள பகுதிகளில் 50 மி.மீ முதல் 75 மி.மீ வரையிலும், அம்பாறை கல்ஓயா படுகைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சுமார் 100 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இருப்பினும், பெரும்பாலான ஆறுகளில் நீர் மட்டம் விரைவாக உயரும் நிலை தற்போது காணப்படவில்லை என நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஈரவலயத்தில் உள்ள கின், நிலவலா, களு ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றில் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்ட போதிலும், அவை வெள்ள நிலையை எட்டவில்லை.

எனினும், அப்பகுதிகளில் மேலும் கணிசமான மழை பெய்யுமாயின் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

“தற்போது பெய்து வரும் மழையின் தீவிரத்தன்மை அதிகமாக உள்ளது. அதாவது குறுகிய காலத்தில் அதிக மழை பெய்கிறது. இந்த நிலைமையின் கீழ், தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது” என பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects