ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் புதிய இருதய சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள்!

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய இருதய சிகிச்சைகளுக்கான வசதிகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் புதிய இருதய சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 16.09.2026 அன்று ஆரம்பிக்கப்பட்டன.

இருதய நாடி நோய்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை வலுப்படுத்தும் வகையில், ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஊடாக சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், 2,403 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அதிநவீன அறுவை சிகிச்சை கூடங்கள், வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர் சிகிச்சை வசதிகள் மற்றும் முழுமையான ஆய்வுகூடங்களைக் கொண்ட இந்த இருதய சிகிச்சை பிரிவு கட்டிடமானது, 08 மாடிகளைக் கொண்டுள்ளதுடன், 2028 மே மாதமளவில் இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ளது.

இதன்போது நினைவுப் பலகையை திறந்து வைத்து, கட்டிட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, வைத்தியசாலை பணிக்குழாமுடன் சுமூகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ,

கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் நாம் இந்த இடத்திற்கு வருகை தந்து, இருதய சிகிச்சை பிரிவின் பணிகளை விரைவில் ஆரம்பிப்பதாக உங்களுக்கு வாக்குறுதி அளித்தோம். 2028 மே மாதமளவில் இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.

நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர,

திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார சேவை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் கடந்த காலங்களில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 10 வருடங்களாக பேச்சுவார்த்தை மட்டத்தில் இருந்த ஒரு திட்டமே இன்று இவ்வாறு யதார்த்தமாகியுள்ளது.

JICA நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் கடந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டன. பொருளாதாரத்தை மறுசீரமைத்து இந்நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளினாலேயே இன்று இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க முடிந்துள்ளது. மேலும், JICA உதவியுடன் இந்த வைத்தியசாலையில் செயற்படுத்தப்படும் இரண்டாவது திட்டம் இதுவாகும்.

கடந்த இரண்டு வருடங்களுக்குள் திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, அனர்த்தங்களின் பின்னர் பெருமளவிலான நிதியைச் செலவிட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இத்திட்டம் திருகோணமலைக்கு மாத்திரமன்றி, முழு கிழக்கு மாகாணத்திற்கும் பாரிய சேவையாற்றும் என நாம் நம்புகிறோம்.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் Akio Isomata

இந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருக்கும், அனைத்து இலங்கைத் தரப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு நாம் வழங்கும் இந்த உதவி, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே சுகாதாரத் துறையில் உள்ள நீண்டகாலக் கூட்டுப்பங்களிப்பின் ஒரு பகுதியாகும்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இதே மருத்துவமனையில் நடைபெற்ற கழிவு முகாமைத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின்போதே, இந்தத் திட்டம் குறித்து அமைச்சருடன் நான் கலந்துரையாடினேன்.

இன்று இந்தத் திட்டம் யதார்த்தமாகியிருப்பதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதில் ஜப்பான் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையின் நீண்டகால மற்றும் நம்பிக்கையான பங்குதாரராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். சுகாதாரத் துறையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நிலையான சுகாதார சேவையை உருவாக்குவதற்கும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு உதவ ஜப்பான் எப்போதும் தயாராக இருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இந் நிகழ்வில் மதத் தலைவர்கள், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர உட்பட பிரதேச மக்கள் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் அரச அதிகாரிகள், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் Akio Isomata, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) இலங்கை அலுவலகத்தின் தலைமைப் பிரதிநிதி Shigeo Honzu ஆகியோர், வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் பணிக்குழாமினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects