சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால் அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் திட்டத்தின் மூலம் சிறுவர் பராபரிப்பு நிலையங்களில் வளரும் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் நோக்கில், பாதுகாப்பான இல்லத்திற்காக கடந்த வருடம் ஒரு மில்லியன் ரூபா வழங்கப்பட்டது என்றும், இவ்வாண்டு அத்தொகை இரண்டு மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், அத்தொகை போதுமானதாக இல்லாவிட்டால் மேலதிக நிதி ஒதுக்கீடுகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் வாழ்விற்கு பலம் வீட்டு உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் 17.09.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருந்து சமூகமயப்படுத்தப்படும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளுக்கும், பாதுகாப்பற்ற மற்றும் அதிக ஆபத்தான சூழ்நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சிறுவர்களுக்காகவும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இரண்டு மில்லியன் நிதி உதவி வழங்கப்படுவதுடன், இன்றைய தினம் மேல் மாகாணப் பயனாளிகளுக்கு அந்த நிதி உதவி வழங்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க :
வாழ்விற்கு பலம் வேலைத்திட்டம் என்பது நமது நாட்டின் முக்கியமானதொரு துறையின் ஆரம்பமாகும்.
சிறுவர்கள் என்பவர்கள் நாட்டின் பொக்கிஷம். நமது நாட்டில் பெற்றோரின் அரவணைப்பில் வளரும் பிள்ளைகளும் உள்ளனர். தாய், தந்தை அல்லது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளரும் பிள்ளைகளும் உள்ளனர். அவ்வாறில்லையெனில், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வளரும் பிள்ளைகளும் உள்ளனர். இவ்வாறு பல்வேறு இடங்களில் நமது பிள்ளைகள் வளர்கிறார்கள்.
எங்கு, எவ்வாறான சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவர்கள் நமது பிள்ளைகளே.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு பிணைப்பு உள்ளது. அவர்கள் தமது பிள்ளைகளின் வாழ்க்கையைச் சிறப்பிக்கவும், அவர்களைப் பாதுகாக்கவுமே முயல்கிறார்கள். அதுபோலவே, சமூகத்திற்கும் பிள்ளைகளுக்கும் இடையேயும் ஒரு தொடர்பு உள்ளது. சமூகம் எப்போதும் பிள்ளைகளுக்குச் சிறந்த பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது. அரசாங்கத்திற்கும் பிள்ளைகளுக்கும் இடையேயும் ஒரு பிணைப்பு உள்ளது. அரசாங்கம் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அதற்குப் பொருத்தமான சூழலை உருவாக்குவதற்கும் செயற்படுகிறது. அது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
கலாசார ரீதியாகப் பார்த்தால் இந்த உறவுகள் மிகச் சிறந்த மட்டத்திலிருப்பினும், இன்னும் நாங்கள் ஒருபோதும் எதிர்பாராத சம்பவங்களுக்கு பிள்ளைகள் முகம்கொடுக்க நேரிடுகிறது. அதாவது, பிள்ளைகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கவும், அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதிலும் நாங்கள் இன்னும் வெற்றிபெறவில்லை. இப்பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்து சமூகத்திற்கும், அரசுக்கும், பெற்றோருக்கும், எம் அனைவருக்கும் மிகப் பாரிய பொறுப்புள்ளது.
எந்தவொரு பிள்ளையும் பாதுகாப்பற்ற முறையிலோ அல்லது அன்பின்றியோ வளர்க்கப்பட வேண்டுமென நாங்கள் நினைப்பதில்லை. ஒவ்வொரு பிள்ளையும் வாழ்வதற்குரிய சூழலை உருவாக்குவதே எமது பொறுப்பு. அவர்களின் பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
1956 ஆம் ஆண்டு முதல் சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டில்தான் அதன் செயற்பாடுகள் பூர்த்தியடைந்தது. எனினும், பிள்ளைகளை தொழிலில் ஈடுபடுத்துவதன் மூலம் மாத்திரம் அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறவில்லை. இன்னும் பல துறைகளினூடாக அவர்கள் இன்னல்களுக்கு ஆளாகினர், பாதுகாப்பற்ற தன்மையை எதிர்கொண்டனர். எனவே, இன்னும் பல துறைகள் ஊடாக நாம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக இன்று நாங்கள் எதிர் பார்ப்பது அதில் ஒரு பகுதியைத்தான். முதலாவது, சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் வளர்ந்து சமூகமயப்படுத்தப்படும் இளைஞர், யுவதிகளின் வாழ்க்கையைப் பாதுகாப்பதாகும். பாதுகாப்பற்ற வீடுகளில் வாழும் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதுகாப்பதாகும். தமது பிறந்த நாளை அறியாத, குடும்பப் பெயரை அறியாத பிள்ளைகள் எமக்குச் சந்திக்கக் கிடைத்துள்ளனர்.
ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தமது பிள்ளைகள் தொடர்பில் ஒரு கனவு உள்ளது. ஆனால், இந்தப் பிள்ளைகள் குறித்துக் கனவு காண்பவர் யார்? பொருளாதார வசதிக்கு ஏற்ப பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும், அவர்களுக்குத் தேவையான வீடுகளையும் நிர்மாணிக்கிறார்கள். இந்த நிலையங்களில் இருக்கும் பிள்ளைகளுக்காக வீடுகளை நிர்மாணிப்பவர் யார்? அந்தப் பொறுப்பினைத்தான் நாங்கள் நிறைவேற்ற முயல்கிறோம். அது எமது கடமையாகும்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருக்கும் பிள்ளைகள் சமூகத்துடன் இணைக்கப்படும் போது அவர்களுக்கு ஏதாவது ஒரு நிதிச் சேமிப்பும், தமக்கென ஒரு சொத்தும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், இந்த நிலையங்களில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்கி, ஒவ்வொரு மாதமும்அந்தக் கணக்கில் 5000 ரூபா தொகையை வைப்புச் செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தோம். சில பிள்ளைகளின் கணக்குகளை ஆரம்பிப்பதிலும் சில சிக்கல்கள் உருவாகின. எனினும் நாங்கள் அதனைச் செய்கிறோம். அத்துடன், 18 வயது பூர்த்தியடைந்து சமூகமயமாக்கப்பட்ட பிள்ளைகளுக்குத் தமது எதிர்காலத்தில் பாதுகாப்பாக வாழக்கூடிய வகையில் வீடு ஒன்றை வழங்குவதற்கும் தீர்மானித்தோம்.
மேலும், பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதுகாப்பதும் எமது பொறுப்பாகும்.
சில வீடுகளில் உள்ள இடவசதி போதாமையின் காரணமாகவே சில பிள்ளைகளின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. அதன்படி, கடந்த வருடம் அவர்களின் முக்கிய தேவையாக இருந்த பாதுகாப்பான வீடு ஒன்றை வழங்குவதற்காக பத்து இலட்சம் ரூபாவை வழங்கினோம். அது போதாது என்று கூறியதனால் இந்த வருடம் இருபது இலட்சம் அல்லது இரண்டு மில்லியனை ஒதுக்கியுள்ளோம். அதுவும் போதாது என்றால் கூறுங்கள், மேலும் நிதியை ஒதுக்க நாம் தயாராக இருக்கிறோம். ஏனெனில் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அரசாங்கமாகவே நாம் செயற்படுகிறோம்.
மேலும், தேசத்தின் பொக்கிஷமான பிள்ளைகளின் வாழ்க்கையைப் பாதுகாப்பதில் சமூகத்திற்கும் பாரிய பொறுப்புண்டு என நாம் நம்புகிறோம். ஏதேனும் ஒரு காரணத்திற்காக பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான நல்லுறவு முறிவடைந்து வருகிறது. சமூகத்திற்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவும் பலவீனமடைந்து வருகிறது. பிள்ளையைப் பிள்ளையாகப் புரிந்துகொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அது எமது பொறுப்பாகும். அது தொடர்பில் அரசாங்கத்திற்குப் பொறுப்புண்டு.
ஆனால், அரசாங்கத்தால் மட்டுமே இதனைச் செய்ய முடியாது. பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில் சமூகம் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எனினும், சமூகத்திற்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு முறிவடைந்து வருகிறது.
அந்தச் சமூகத்தை நாம் உயர் மட்டத்திற்கு மேம்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும். எமது பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பை தேசிய மட்டத்தில் நாம் பொறுப்பேற்க வேண்டும். ஒரு பிள்ளைக்குக் கூட எந்தவிதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது. நாம் அரசாங்கம் என்ற வகையில் அதற்காகப் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. சமூகமாக அந்தப் பொறுப்பினை நிறைவேற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் :
அரசாங்கமாக நாம் பெற்ற மிகப் பாரிய வெற்றி என்னவென்றால், அரசியல், சாதி, மத பேதமின்றி அனைவரும் கைகோர்த்து ஒரே திசையில், ஒரே பயணத்தை மெதுவாகவேனும் நிலையானதாக மேற்கொள்ளக்கூடிய ஒரு நாட்டை உருவாக்க முடிந்தமையாகும்.
போக்குவரத்து, சுகாதாரம் போன்ற துறைகள் மூலம் பௌதிக அபிவிருத்தியினை எவ்வாறு அடைந்து கொள்கிறோமோ, அதே அளவுக்கு சமூக வளர்ச்சியினை அடைந்து கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது. இந்தப் பௌதிக அபிவிருத்திக்கு இணையான சமூக வளர்ச்சியொன்றை கட்டியெழுப்பத் தவறினால், பல பரிமாண வறுமையால் பாதிக்கப்படும் சமூகம் ஒன்று உருவாகும். நாம் பல பரிமாண வறுமை இலக்குகளை வென்ற நாடாகும்.
அல்லது பல பரிமாண வறுமையிலிருந்து விடுபடுவதற்காகச் செயற்பட்ட, செயற்பட்டுவரும் நாடாகும்.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு அத்தகைய பல பரிமாண வறுமை இலக்குகளை வென்றெடுக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு நாங்கள் உருவாக்குவது பெண்களினதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்தையே. எதிர்கால இலக்குகளை. அவர்களின் வாழ்க்கையை. அவர்கள் தவறவிட்ட, சந்தர்ப்பங்களை வழங்குவதையே. அதற்காக நாங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
எமக்கிருக்கும் அமைச்சுகளில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு என்பது ஒரு மறைக்கப்பட்ட அமைச்சாகும். ஏனென்றால் எங்களிடம் இருப்பது பௌதிக அபிவிருத்தியைக் காட்டக்கூடிய திட்டங்கள் அல்ல. எமது அமைச்சு என்பது பெண்களினதும் பிள்ளைகளினதும் பல கதைகளின் தொகுப்பாகும்.
அந்தக் கதைகளில் எவற்றையும் வெளியில் வெளிப்படுத்த முடியாது. அந்தக் கதைகள் அனைத்திலும் அவர்கள் தவறவிட்ட, துன்புறுத்தப்பட்ட ஒரு இடம் இருக்கக்கூடும். ஒரு அரசாங்கமாக எமது பொறுப்பு, தவறிய இடங்களைச் சரிசெய்து, புண்பட்ட இடங்களை ஆற்றுப்படுத்தும் ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு உரித்தாக்கிக் கொடுப்பதாகும். அவர்கள் தவறிய, துன்புறுத்தபட்ட இடங்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு ஏற்படாதவாறு ஆரோக்கியமானதொரு வாழ்க்கையை உரித்தாக்கிக் கொடுப்பதாகும்.
அதனால்தான் ஒரு அழகான வாழ்க்கைக்காக இடப்படும் அடித்தளமாக இந்த “வாழ்விற்கு பலம்” வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை முழுவதும் 356 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் 8000 இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பிள்ளைகள் 8000 பேரும் இணைவது சிறுவர் குற்றவாளிகளாகவும், அதேபோல் பாதிக்கப்பட்டவர்களாகவுமே ஆகும். மேலும் அநாதையான, கைவிடப்பட்ட, பொறுப்பாரற்ற, பாதுகாப்பற்ற பிள்ளைகளாகவுமே ஆகும். அவர்கள் அனைவரின் மனநிலைகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. ஆனால் அந்த அனைவரையும் ஒன்றாகப் பராமரிக்கும் ஒரு பொறிமுறையை நாம் செயற்படுத்த வேண்டியுள்ளது.
எனவே, 2027 ஆம் ஆண்டில் எமது எதிர்பார்ப்பு, இந்த பிள்ளைகளைப் பிரித்து, மிகவும் பாதுகாப்பான முறையில், ஆலோசனை வழிகாட்டல்களுடன் அவர்களின் கல்வி நலனுக்காக அவர்களை மேம்படுத்துவதே ஆகும்.
அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி மீண்டும் சமூகமயமாக்குவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்காக விரைவான நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். சிறைவாசம் அனுபவிப்பவர்களில் பெரும்பான்மையினர் ஆண்களே என்பது ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதேபோல், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் இருப்பவர்களில் பெரும்பான்மையினர் ஆண் பிள்ளைகளாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நாம் அவர்களுக்கு எதிர்கலத்தை உருவாக்க வேண்டும்.
இந்த நிலையங்களில் எப்போதும் ஒரு திரைப்படத்தையோ, நாடகத்தையோ பார்த்திராத பிள்ளைகளைச் சந்தித்துள்ளோம்.
அதனால், இவர்களைச் சிறந்த, நல்ல பிரஜைகளாக உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம். இந்த ஆன்மீக வளர்ச்சியுடன் ஆரோக்கியமான, அமைதியான மனித சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று நம்புகிறோம்.
அதற்காக ஆலோசனை சேவையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. எனவே, இன்று இந்த வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் அனைவரிடமும் நாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், உங்களின் வீடுகளில் அன்பை பரப்பவும். பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு வழங்குங்கள். மகிழ்ச்சி நிறைந்த இல்லத்தை உருவாக்குங்கள்.
இந் நிகழ்வில் மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு ஆணையாளர் யூ. எல். மதீஷா ஜினஞ்ஜலீ ஜயதிலக, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் தறங்கனி விக்ரமசிங்க ஆகியோருடன் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









