இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் அரச துறையின் தொழில்நுட்ப அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவிற்கும், உலக வங்கி குழுமத்தின் முதன்மைத் தகவல் அதிகாரியும் சிரேஷ்ட துணைத் தலைவருமான ஏமி டொஹர்ட்டி (Amy Doherty) தலைமையிலான தூதுக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் 17.09.2026 அன்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, GovTech ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷெவான் குணதிலக்க உட்பட உலக வங்கி குழுமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, இலங்கையின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு அபிவிருத்தி, அரச துறையை நவீனமயமாக்குதல், ஒருங்கிணைக்கப்பட்ட அரச தொடர்பாடல் அமைப்புகளை நிறுவுதல் மற்றும் உள்ளூர் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் கண்டுபிடிப்புச் சூழலமைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, அரச நிறுவனங்களுக்குள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கவனமாக ஏற்றுக்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள “டிஜிட்டல் மாற்றப் பிரிவுகள்” (Digital Transformation Units) மற்றும் “பொது தாக்க சாம்பியன்கள் நெட்வொர்க்” (Public Impact Champions Network – PIC-Net) ஆகியவற்றின் ஊடாக அரச அதிகாரிகளின் தொழில்நுட்பத் திறன்களையும் தலைமையத்துவத்தையும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அரச மற்றும் தனியார் துறைகளில் பொறுப்புடன் பயன்படுத்துதல், சைபர் பாதுகாப்பு தயார்நிலை, மற்றும் இலங்கை கணினி அவசர காலப் பதிலளிப்புக் குழு (Sri Lanka CERT) மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் ஆகியவற்றின் கீழ் சைபர் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்தும் இரு தரப்பினரின் கவனமும் செலுத்தப்பட்டது.
உலக வங்கி குழுமத்தின் நிறுவன தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல், ‘அஜைல்’ (Agile) முறைமை அணுகுமுறைகள் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான முன்னணி உலகளாவிய அனுபவங்களைக் கொண்ட திருமதி ஏமி டொஹர்ட்டி, TRACE City வளாகத்தில் இளம் தொழில்முனைவோரையும் தனியார் துறை தொழில்நுட்பத் தொழில்முனைவோரையும் சந்தித்ததன் மூலம் பெற்ற அவதானிப்புகளையும் இதன்போது பகிர்ந்துகொண்டார்.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










