தரை, கடல் மற்றும் விமானப் படைகளின் நிரந்தரப் படையணிகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளால் ஆற்றப்பட்ட சிறப்பான சேவைகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் முகமாக “விசிஷ்ட சேவா விபூஷண” பதக்கம் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 30.09.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன்று விசிஷ்ட சேவா விபூஷண பதக்கங்களைப் பெறும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், இந்நாட்டுக்கும் மக்களுக்கும் சிறப்பான சேவையை வழங்கியுள்ளனர் எனவும், அவர்கள் பகல், இரவு, சீரான அல்லது சீரற்ற காலநிலை, உயிர் ஆபத்து உள்ளதா இல்லையா என்பனவற்றைக் கருத்திற் கொள்ளாமல் தமது கடமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, பொறுப்புடன் நடந்துகொண்டனர் என்றும், இன்று நமக்கு அத்தகைய அரச சேவையே தேவை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் மூலம் ‘விசிஷ்ட சேவா விபூஷண’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பதக்கம், ஒரு சிறப்பான விருதாகும். முப்படைகளில் சிரேஷ்ட பதவிகளை வகிப்பதுடன், குறைந்தபட்சம் 25 வருட தொடர்ச்சியான சேவைக் காலத்தையும் சிறந்த சேவை வரலாற்றையும் கொண்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் இப்பதக்கம் வழங்கப்படுகின்றது.
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவிப்பொன்றின் மூலம், இப்பதக்கத்தை வழங்குதல், பறிமுதல் செய்தல், மீள வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக முப்படைகளில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு இது வழங்கப்படுகின்றது.
முப்படைகளில் சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற 57 அதிகாரிகள் இங்கு ஜனாதிபதியால் விசிஷ்ட சேவா விபூசண பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பதக்கங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பதக்கம் பெற்றவர்களுடன் ஜனாதிபதி குழு புகைப்படம் ஒன்றிலும் இணைந்து கொண்டார்.
இங்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை,
இன்று இந்தப் பதக்கங்களைப்பெறும் நீங்கள், பொறுப்புமிக்க ஒரு குழுவாக விசேட பாராட்டுக்குரியவர்கள். முப்படையின் மிக சிரேஷ்ட அதிகாரிகளாக மிக முக்கியமான மற்றும் மிகவும் சிறப்பான விருதிற்கு இன்று நீங்கள் உரித்தானவர்களாகின்றீர்கள். உங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை இந்நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பிற்காக ஆற்றிய சிறந்த பணியை பாராட்டும் வகையிலேயே இந்த உரிமையை நீங்கள் இன்று பெறுகின்றீர்கள். தாய்நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்காக நீங்கள் ஆற்றிய அந்தச் சிறந்த பங்களிப்பிற்கு நாங்கள் உங்களுக்கு மிகவும் நன்றியுடையவர்களாய் இருக்கிறோம்.
முப்படையின் சேவையில் ஈடுபட்ட சிரேஷ்ட அதிகாரிகளாக, நீங்கள் 25 வருடங்களுக்கும் மேலாக நமது நாடு எதிர்கொண்ட மிகவும் சிக்கலான யுத்த காலப்பகுதியிலும், ஏனைய இயற்கை அனர்த்தங்களிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள். அதன்போது, சாதாரண அரச ஊழியரை விடவும் அதிக அர்ப்பணிப்புடனும், பொறுமையுடனும், ஆபத்துக்களுக்கு மத்தியிலும் நீங்கள் அந்தப் பொறுப்பினை நிறைவேற்றினீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தச் சமூகப் பொறுப்பினை நிறைவேற்றுவதில், உங்களின் அபரிமிதமான பொறுமை, அர்ப்பணிப்பு, ஆபத்துக்களை எதிர்கொள்ளுதல் ஆகியவற்றுக்குப் பின்னால் நின்று உங்களுக்கு பலமாகத் திகழ்ந்த மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கூட சிறப்பானதொரு பங்களிப்பை வழங்கினர். அவர்களுக்கும் நாம் விசேட நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் உங்களுக்குப் பின்னால் நின்று, உங்களுக்கு ஆதரவளித்து மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றினர்.
பலமான அரச சேவை ஒன்று இன்மையே நாம் ஒரு அரசாங்கமாக இன்று எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். அரச சேவையானது குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்குக் காரணமான விடயங்கள் குறித்து நாம் அனைவரும் ஓரளவிற்கு அறிவோம். நாம் ஒரு அரசாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால் பலமான அரச சேவை அவசியமாகும். நீங்கள் அரச அதிகாரிகளாக அரச சேவையைப் பலப்படுத்துவதற்காக ஆற்றிய பங்களிப்பு மிகச் சிறப்பானது. முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் என்ற வகையில் நீங்கள் அரச சேவைக்காகச் சிறப்பானதொரு பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள்.
நீங்கள் உங்கள் கடமைக்குக் கட்டுப்பட்டிருந்தீர்கள். அதன்போது, இரவு பகல் பாராது, நல்ல காலநிலையா அல்லது மோசமான நிலையா, உயிர் ஆபத்து நிறைந்த சூழ்நிலையா என்பதைப் பற்றியெல்லாம் நீங்கள் கருத்திற் கொள்ளவில்லை. மாறாக, நீங்கள் கடமைக்காக அர்ப்பணித்திருந்தீர்கள். பொறுப்புக்குக் கடமைப்பட்டிருந்தீர்கள்.
எங்களுக்கு அத்தகையதொரு அரச சேவை தேவைப்படுகிறது. பொறுப்புக்குக் கடமைப்பட்ட தரப்பினர் என்ற வகையில் உங்கள் மீது எமக்கு விசேடமான கௌரவம் உள்ளது.
நமது நாடு பல திசைகளிலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதென்றால், அந்தச் சவாலை வென்று முன்னோக்கி வருவதற்கு, அதனைத் தாங்கிக்கொள்ளக் கூடிய, வாழ்நாளில் எதிர்கொண்ட சவால்களுக்கு மிகச் சிறப்பாக முகம் கொடுத்து அவற்றை வெற்றியடைவதற்காகச் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய தரப்பினராகவே நீங்கள் இன்று இந்த விசிஷ்ட சேவா விபூசண விருதுகளைப் பெற்றுக்கொள்கின்றீர்கள்.
பொதுவாக நாடென்ற வகையில் நாம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தொழில்சார் தன்மையை கட்டியெழுப்புவதாகும். எமக்கு பதவிகளையும், தொழில்களையும் உருவாக்க முடியும். ஆனால், தொழில் ரீதியாக ஒருவர் அந்தத் தகுதிநிலைக்கு வந்துள்ளாரா என்ற கேள்வி எழுகிறது. அந்தத் தொழில்சார் தன்மையை வெளிப்படுத்திய அதிகாரிகள் என்ற அடிப்படையிலே முப்படையின் பல சிரேஷ்ட அதிகாரிகளுக்குள் நீங்கள் 57 பேர் இன்று தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள். அது எமது அரச சேவைக்கு இன்றியமையாததாகும். அரச சேவையை மீள ஸ்தாபிப்பதற்காக நீங்கள் நல்லதொரு எடுத்துக்காட்டை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
அதேபோன்று எமது அரச சேவையிலும் சமூகத்திலும் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை உள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் சுய ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாக்கும் திறன் இருக்க வேண்டும்.
ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதற்கு இது மிகவும் அவசியமானது. அரச ஊழியர்கள் கடமையின்போது அரச சேவையுடன் செயற்படுவதுடன் சாதாரண வாழ்க்கையில் பொதுச் சமூகத்திலும் வாழ்கிறார்கள். அந்த சமூகத்துடன் பிணைந்திருக்கிறார்கள். அந்தச் சூழ்நிலையில் நாம் எவ்வாறு சுய ஒழுக்கத்தைப் பேணிக்கொள்ளலாம்? பல நாடுகள் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கக் காரணமாக அமைந்தது சட்டதிட்டங்கள் மாத்திரமல்ல, மாறாக அவர்களாகவே ஏற்படுத்திக்கொண்ட சுய ஒழுக்கமாகும்.
சமூகத்தில் ஏராளமான முறைகேடுகள் காணப்படுவதோடு சமூக விரோதச் செயல்களுக்கு வாய்ப்பான சூழல் காணப்படுகிறது. இத்தகையதொரு சூழ்நிலையில் எவ்வாறு சுய ஒழுக்கத்தைப் பேணிக் கொள்ள முடியும்? வெளிச் சூழல் அதற்கு மாற்றமாக அமைந்திருக்கும்போது அவ்வாறான சூழலிலும் நம்மால் சுய ஒழுக்கத்தைப் பேணிக் கொள்ள முடியுமாயின் அது மிகவும் முக்கியமானதாகும்.
இந்த விசிஷ்ட சேவா விபூசண பதக்கத்தினால் உங்களது சேவைக்கு உரிய கௌரவம் வழங்கப்படுகிறது என்பதும் உண்மைதான். ஜனாதிபதி என்ற வகையில் நானும் இந்த அரசும் உங்களுக்கு கௌரவமளிக்கிறோம் என்பதும் உண்மைதான். எனினும், அது இனிமேலும் தனிப்பட்ட விடயமல்ல. தனக்குக் கிடைத்த பதக்கமோ தனக்குக் கிடைத்த பாராட்டுதலோ அன்றி, அதுவொரு சமூகப் பங்களிப்பாகக் கருதப்பட வேண்டும்.
அப்பொழுதுதான் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் அயலவர்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ முடியும். உங்கள் நிறுவனத்திற்கு நீங்கள் முன்மாதிரியாகத் திகழ முடியும். அவ்வாறானால் மாத்திரமே அதளபாதாளத்தை நோக்கிப் பயணிக்கின்ற எமது அரச சேவையையும், இந்தச் சமூகத்தையும் எம்மால் மீளக் கட்டமைக்க முடியும். அதற்கு முன்மாதிரியை வழங்க முடியும். எனவே, உங்களது சிறப்பான சேவைக்காகப் பெறும் இந்தப் பதக்கமானது நமது சமூகம் புதிய திசையொன்றை நோக்கிப் பயணிப்பதற்கு அடிப்படையாக அமையும் என நான் நம்புகிறேன்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் எச்.எஸ். சம்பத் துய்யகொந்தா உள்ளிட்ட முப்படைத் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









