இலங்கை சுங்கச் சேவையை நவீனமயமாக்கும் முக்கிய கட்டமாக, புதிய காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை இன்று (01.10.2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இலங்கை சுங்கக் கேட்போர் கூடத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவை இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய முறைமையின் மூலம், சுங்க அனுமதி செயற்திறனாகவும், வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படும்.
அதன்படி, இன்று முதல் அனைத்து இறக்குமதியாளர்களும் தங்களது சுங்க ஆவணங்களைச் செல்லுபடியாகும் டிஜிட்டல் கையொப்பத்துடன் (Digital Signature) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், பாரம்பரிய காகித வடிவிலான ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் பழைய முறைமை இனி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பின்னர் ஆவணங்களில் செய்யப்படும் எவ்வித மாற்றங்களையும் இப்புதிய கட்டமைப்பு உடனடியாகக் கண்டறிந்துவிடும் என்பதால், முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









