இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மத்திய வங்கியின் ஏற்றுமதி தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் 469.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான ஆடை ஏற்றுமதி வருமானம், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 434.8 மில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான எட்டு மாத காலத்தில் ஆடை ஏற்றுமதி மூலம் 3,108.3 மில்லியன் டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இது 3,318.1 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்ததுடன், இதற்கமைய இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் ஆடை ஏற்றுமதி வருமானம் 6.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக புடவை மற்றும் ஆடை ஏற்றுமதியும் (Textile & Apparel Exports) ஓகஸ்ட் மாதத்தில் 8.4 சதவீதத்தினாலும், ஜனவரி-ஓகஸ்ட் காலப்பகுதியில் 6.7 சதவீதத்தினாலும் சரிவைக் கண்டுள்ளன.
இந்தத் தரவுகளின் அடிப்படையில், நாட்டின் பிரதான வெளிநாட்டு செலாவணி ஈட்டும் துறைகளில் ஒன்றான ஆடைத் தொழில் துறை, இந்த வருடத்தில் தொடர்ந்தும் சவாலான சூழ்நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றமை புலனாகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










