பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்!

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும் (AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 06.10.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

2026 ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டுக்கான தயார்நிலை குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் செயல் திட்டத்தை அமைச்சு மற்றும் நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.

நமது நாடு எதிர்கொண்டுள்ள ஆபத்தை உணர்ந்து, ஆபத்தைக் குறைப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது வேறு தரப்பினரின் அலுத்தங்களினால் அன்றி, நமது நிறுவன கட்டமைப்புக்கும் நாட்டுக்கும் தேவையானது என்பதற்காக செய்யப்பட வேண்டிய பணி என்று கருதப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்த மதிப்பீட்டுச் செயல்முறை தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை இலங்கை மத்திய வங்கியில் ஸ்தாபிக்கப்பபட்டுள்ள நிதிப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்வதுடன்,

தொழிநுட்ப இணக்கப்பாடு குறித்த பரிந்துரைகள் மற்றும் செயல்திறன் தொடர்பாக அதிகாரிகள் இங்கு ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டவைகள் தொடர்பான சட்டத்தைச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவருதல், கம்பனிச் சட்டம் மற்றும் அதன் செயற்பாடுகள், நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

குறித்த பரிந்துரைகளைச் செயற்படுத்துவதில் ஏதேனும் குறைபாடுகளோ அல்லது தாமதங்களோ இருப்பின், அவற்றை திருத்தி, அரசாங்கமாகவும் நிறுவன கட்டமைப்பாகவும் எதிர்வரும் 03 வாரங்களுக்கு இச்செயல்பாட்டில் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், நிறுவன அறிக்கைகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் உரிய குழுக்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி, தயார் நிலையுடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த மூன்றாவது மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு ஒரு நாடாக இன்றைய தினத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒரு பணி இது என்று மேலும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிரப் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பணிகளுக்காக கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

இந் நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்டமேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. ஏ. விமலேந்திரராஜா, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய,மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே. ஜே. பி. சிறிகுமார, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் நெலுமணி தவுலகல, மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப்பிரிவின் பிரதானி கலாநிதி சுபானி கீர்த்திரத்ன,உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புவனெக அலுவிஹாரே உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects