டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிகிச்சை மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகளை மீள வலுப்படுத்தும் வகையில், டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி. நிறுவனம் ரூ. 87 மில்லியன் பெறுமதியான நவீன சத்திரசிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.
இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிலாபம் நகர மேயர், அரச அதிகாரிகள், வைத்தியசாலை நிர்வாகிகள், டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்ட மருத்துவர்கள், சுகாதாரத்துறை நிபுணர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலையின் இரண்டு சத்திரசிகிச்சை அறைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள், நவீன எண்டோஸ்கோபி அமைப்பு, Defibrillators, Multipara Monitors, Syringe Pumps மற்றும் Pulse Oximeters உள்ளிட்ட பல அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டன.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்திற்கு பங்களிக்கும் வகையில் டயலொக் நிறுவனம் வழங்கும் மொத்தம் ரூ.420 மில்லியன் நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அனர்த்த நிலைமையிலும் குறுகிய காலத்திற்குள் வைத்தியசாலை சேவைகளை மீள ஆரம்பிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வைத்தியசாலை ஊழியர்களின் சேவையும் இதன்போது பாராட்டப்பட்டது.
மேலும், சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திக்காக சுகாதார அமைச்சின் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியசாலை கட்டடங்களின் நிர்மாணப் பணிகளை அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கவும், ரூ.5 பில்லியன் முதலீட்டில் அமைக்கப்படவுள்ள அவசர விபத்து மற்றும் சிகிச்சைப் பிரிவின் நிர்மாணத்தை விரைவாக ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக சுகாதார அமைச்சினால் ரூ.11 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









