தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூகப் பயணமானது கிராமிய மக்களை நகரங்களுக்கு அழைத்து வராமல், கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, வசதிகளை வழங்குவதாகும் என்றும், இதன்போது கிராமத்திற்கும் நகருக்கும் இடையில் மிக மேம்பட்ட வீதித் கட்டமைப்பு, சிறந்த தொடர்பாடல் கட்டமைப்பு, செயற்திறனான மற்றும் வலுவான அரச சேவையை ஸ்தாபிப்பதே எமது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில், 08.10.2026 அன்று அலரி மாளிகையில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் அரச சேவையைப் பெரிதும் மதிக்கின்ற அதேவேளை, அரச சேவையைச் சிறந்த சம்பள மட்டத்திற்குக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு அரசாங்கம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனாலேயே மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட அடிப்படைச் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது என்றும் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர் சேவைக்கு புதிய பிரமாணக் குறிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கிராம உத்தியோகத்தர் சேவை தரம் III இற்காகத் தெரிவுசெய்யப்பட்ட 1,540 அதிகாரிகளுக்கு முதன்முறையாக இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டன. பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் நேர்முகத்தேர்வுகளின் திறமைகளை மாத்திரம் கருத்திற்கொண்டு தகுதியானவர்களை அரச சேவைக்கு உள்ளீர்க்கும் கொள்கைக்கு இணங்க, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கிராம உத்தியோகத்தர் பதவிக்கென அவர்களுக்கே உரித்தான தனித்துவமான சேவையின் கீழ்,
அவர்களுக்கெனத் தனித்துவமான சம்பளக் கட்டமைப்போடு கிராம உத்தியோகத்தர் சேவையை மீள ஸ்தாபிக்க தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்போது, அந்த நேரத்தில் பெற்றுக்கொண்டிருந்த சம்பளத்தை விட சம்பள உயர்வுகளுடன், பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை போதுமான அளவு அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற 28 பேருக்கு ஜனாதிபதியால் அடையாள ரீதியாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு மேலும் உரையாற்றுகையில்:
இன்று நீங்கள் இலங்கையின் மிக முக்கியமான ஒரு தொழில் துறைக்குள் காலடி எடுத்து வைக்கிறீர்கள். நம் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றும் அரச அதிகாரி யார் என்று கேட்டால், அது நமது கிராம உத்தியோகத்தர் தான் இருப்பார்கள். ஒரு கிராமத்தில் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் அரசிற்கும் இடையிலான தொடர்பும், அரசினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் கிராம உத்தியோகத்தர்களை அடிப்படையாக கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன.
கிராமத்தைப் பொறுப்பேற்றுப் பணியாற்றும் ஒரு அதிகாரி என்ற வகையில் மாத்திரம் நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்கள் அல்ல. நாங்கள் தயாரித்துள்ள பொருளாதார மற்றும் சமூக நோக்கின் காரணமாகவே நீங்கள் எங்களுக்கு முக்கியமானவர்களாகிறீர்கள். நகரங்களை மையமாகக் கொண்ட அதிகப்படியான மக்கள்தொகை காரணமாக உருவாகும் நெருக்கடியை உலகின் ஒவ்வொரு நாடும் இன்று எதிர்கொண்டு வருகிறது. இது இன்று உலகின் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் நாடுகளும், வளர்ச்சியடையாத நாடுகளும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும். கிராம மட்டத்தில் பொருளாதார வாய்ப்புகளையும் சேவைகளையும் வழங்குவதில் தோல்வியுடையும் போது, இலட்சக்கணக்கான மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களை நோக்கிச் சென்றனர். இது இன்று உலகின் பல நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும்.
ஆனால், இந்தப் பிரச்சினையில் நாம் அதிர்ஷ்டம் செய்துள்ளோம். நம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இன்னும் கிராமப்புறங்களிலேயே வசிக்கிறார்கள். அப்படியானால் நமது பொருளாதார மற்றும் சமூகப் பயணம் என்னவாக இருக்க வேண்டும்? நமது பயணம் ஒருபோதும் கிராமப்புறங்களில் வாழும் மக்களை நகரங்களுக்கு அழைப்பதாக இருக்கக்கூடாது. அந்த வியூகம் தோல்வியடைந்துவிட்டது என்பது இப்போது தெளிவாகிறது. அப்படியானால் நமது வளர்ச்சியின் பாதை, கிராமத்து மக்களை நகரத்திற்கு அழைப்பது அல்ல, மாறாக கிராமத்தில் உள்ள மக்களுக்கே கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் வசதிகளை வழங்குவதுமாகும்.
இதற்கு கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் மிகவும் மேம்பட்ட வீதிக் கட்டமைப்பு அவசியமாகும். அதுபோல கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் சிறந்த தகவல் தொடர்பு
கட்டமைப்பு அவசியமாகிறது. அதற்காக எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் தகவல் தொடர்பு கட்டமைப்பை நிறுவ டிஜிட்டல் அமைச்சுடன் கலந்துரையாடி தீர்மானித்துள்ளோம். மேலும் கிராம மக்களுக்கு வழங்கும் சேவைகள் மிகவும் விரைவாகவும் எளிதாகவும் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே கிராமத்து மக்களை கிராமத்திற்குள்ளேயே வைத்து அவர்களின் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்.
இதன் போது கிராம உத்தியோகத்தர்களுக்குப் பெரியதொரு பொறுப்பு வருகிறது. அந்தச் சேவைகளை வழங்குவதில் வீட்டுக்கு வீடு செல்வதுடன், குடிமக்கள் வந்து கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் அலைக்கழிக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், இந்த டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாட்டில், மனிதர்களுக்கிடையேயான மனிதநேய உறவுகளும் உணர்வுகளும் சிதைவடையாதவாறு ஒரு சமநிலையைப் பேணுவது மிக முக்கியமானதாகும்.
மேலும், அரச சேவையின் பணிகளை மூன்று வகைகளாகப் பிரித்து டிஜிட்டல் முறையில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர் மட்டத்திலேயே நிறைவு செய்யப்படும் பணிகள், கிராம உத்தியோகத்தர் வழங்கும் சான்றிதவலின் அடிப்படையில் பிரதேச செயலகத்தில் நிறைவு செய்யப்படும் பணிகள், கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் சான்றிதலின் அடிப்படையில் வேறு அரச நிறுவனத்தால் நிறைவேற்றப்படும் பணிகள் என, இதற்கான அவசியமான டிஜிட்டல் முறையை உருவாக்குவது தொடர்பாக டிஜிட்டல் அமைச்சும் பொது நிர்வாக அமைச்சும் கலந்துரையாடியுள்ளன. அடுத்த ஆண்டு இரண்டு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு முன்னோடித் திட்டமாக இதனைத் ஆரம்பிப்பதற்கான நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கிறோம்.
மேலும் நமக்கு வலுவான அரச சேவை தேவைப்படுகிறது. உலகின் ஒவ்வொரு வளர்ந்த நாடும் வலுவான அரச சேவை மூலமாகவே முன்னேறியது. ஆனால் இன்று நமது அரச சேவையில் பணிபுரியும் அதிகாரிகளும் சேவைகளைப் பெறும் பிரஜைகளும் ஒரு திருப்திகரமான மனநிலையில் இல்லை. அரச சேவையில் பதவிகளுக்கும் நாற்காலிகளுக்கும் இடையிலான போட்டி உருவாகியுள்ளது. அத்துடன் பழைய கணினிகள், பழைய வாகனங்கள் மற்றும் சேதமடைந்த கட்டடங்கள் காரணமாக அரச சேவை ஒருவித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்காக அரசாங்கமென்ற வகையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அரச சேவைக்கு 1,750 கெப் வாகனங்கள் தேவை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தேவையான வாகனங்களை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான கணினிகள் மற்றும் உபகரணங்களை பொது நிர்வாக அமைச்சின் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரச நிறுவனக் கட்டடங்கள் புனரமைக்கப்பட வேண்டும். மேலும் புதிய கட்டடங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கமைய செத்சிறிபாய 3 ஆம் கட்டத்தை நிறைவு செய்யவும், 4 ஆம் கட்டத்தைத் தொடங்கவும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நாம் நிலத்தைக் முகாமைத்துவம் செய்ய வேண்டும். பாரிய கட்டடங்கள் மீது நமக்குள்ள விருப்பத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். எனவே அலுவலகங்களுக்கு எவ்வளவு இடவசதி தேவைப்படுகிறது, அந்தந்த குறிப்பிட்ட நில அளவுகள் குறித்த முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அலுவலக வசதிகளைத் தயாரிக்கும் பொறுப்பு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எமது அரச சேவையில் தற்போதுள்ள சம்பள அளவுகள் போதாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனால் பொறியியலாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சட்ட அதிகாரிகள் போன்ற திறமையான நிபுணர்களை அரச சேவையில் சேர்ப்பதில் சிரமம் நிலவுகிறது. இருப்பினும், அரச ஊழியர்களின் சம்பளத்தை 10 ரூபாவால் உயர்த்தினால் மாதமொன்றுக்கு 13 மில்லியன் ரூபா மேலதிக செலவுச் சுமையையும், 100 ரூபாவால் உயர்த்தினால் 1.3 பில்லியன் செலவுச் சுமையையும் ஏற்படுத்தும். எனவே அரச சேவையின் செயல்திறனை அதிகரித்து அதன் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இதன் போது நாங்கள் எந்த வகையிலும் அரச சேவையைக் கைவிடப்போவதில்லை. அரச சேவை அவசியமானது, அது மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கொள்கையாகும். எனினும் இந்தச் சேவையை வழங்குவதற்கான பொறிமுறை இன்னும் சிறியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதற்கமைய பிரதமர் தலைமையிலான குழுவொன்றின் மூலம் அரச நிறுவனங்களை ஒன்றிணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட 33 நிறுவனங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக நஷ்டஈட்டுத் தொகையை வழங்குவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும் இணைக்கப்பட வேண்டிய பல நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரச சேவை மக்களுக்கு ஒரு சுமையாக இருக்கக்கூடாது. ஆனால் மக்களுக்குச் சிறந்த அரச சேவையை வழங்க வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் திடஉறுதியுடன் உள்ளது.
ஆகவே, அரச சேவையை மிகச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டுமானால் அது மேலும் சுருக்கப்பட வேண்டும். நல்ல திறமை கொண்ட குழுக்களைக் கொண்டு வருவதற்கு நல்ல சம்பள அளவுகளை உருவாக்க வேண்டும்.எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்திலேயே மூன்று கட்டங்களாக அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த் நாம் தீர்மானித்தோம். அதற்கமைய 2027 ஆம் ஆண்டளவில் சம்பளத்தை உயர்த்துவதற்காக மாத்திரம் 330 பில்லியன் ரூபா செலவுச் சுமையை ஏற்றுள்ளோம். ஏனைய சலுகைகள் குறித்து அதன் பின்னர்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதில் அனைவரும் நியாயமாக நடந்துகொள்வார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் சிறந்த அடிப்படைச் சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். அத்துடன் கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. அலுவலகப் கொடுப்பனவு 1,000 ரூபாவிலிருந்து 2,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. சீருடை கொடுப்பனவு 5,000 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. காதிதாதிகள் கொள்வனவு கொடுப்பனவு 1,500 ரூபாவிலிருந்து 3,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நாம் அடுத்த வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளோம். அந்த வரவு செலவுத் திட்டத்தில், 2027ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பள உயர்வுக்குத் தேவையான 330 பில்லியன் ரூபாவை சமநிலைப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தே கவனம் செலுத்துவோம். அதற்குப் பிறகே கொடுப்பனவுகளுக்காக எவ்வளவு செலவை ஏற்க முடியும் என்பது குறித்து அவதானம் செலுத்தப்படும்.
அரச சேவைக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்தச் சம்பளம் மக்களின் வரிப் பணத்திலிருந்தே வழங்கப்படுகிறது. இந்த வரி விகிதங்களைக் குறைக்கும் இலக்குடனேயே நாங்கள் செயற்பட்டு வருகிறோம். எதிர்வரும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே எமது இலக்காகும். ஒரு பிள்ளை புத்தகத்தை வாங்கிப் படிக்கும் போது அதற்கும் வரி செலுத்த வேண்டுமா? அதை நாம் நீக்க வேண்டும். அந்த இலக்குகளுடனேயே செலவுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டும். நாங்கள் மிகச் சிறந்த அடிப்படைச் சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். தேவைகளை செவிமடுத்துக் கொடுப்பனவுகளை அதிகரித்துள்ளோம். எனவே, இது குறித்து புரிந்துணர்வுடன் செயற்படுவோம். நாங்கள் ஒருபோதும் அரச சேவையை அரசியல்மயமாக்க எதிர்பார்க்கவில்லை. இந்த நாடு குறித்து நமக்கு ஒரு நல்ல நம்பிக்கை உள்ளது. அதில் எமது அரச சேவைக்கு பெரும் பொறுப்பு உள்ளது.
ஓர் அரசாங்கமாக நம்மால் கொள்கைகளை உருவாக்க முடியும்,பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை கிராமம் வரை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரச சேவைக்கே உள்ளது. அதற்கு பலமான அரச சேவை அவசியமாகும்.
இன்று நியமனம் பெறும் நீங்கள், மக்களின் மிக நெருங்கிய அரச அதிகாரிகள் ஆவீர்கள். ஒரு ஆதரவற்ற நிலையிலோ, அனர்த்தத்தின் போதோ, ஒரு குழந்தையின் பிறப்பின் போதோ அல்லது இறப்பின் போதோ பொதுமக்கள் முதலில் நாடிச் செல்வது கிராம உத்தியோகத்தரையே ஆகும். எனவே, அரசின் பெரும் பணியையும் மக்களுடனான தொடர்பையும் ஏற்படுத்துபவர்கள் கிராம உத்தியோகத்தர்களே. எனவே, நீங்கள் பெரும் மரியாதைக்குரிய, பொதுமக்களின் சுமையைச் சுமக்கும் ஒரு விருத்தி சார்ந்த தொழிலில் இணைகிறீர்கள். அதனால் கிராம மக்களுக்கும் கிராம உத்தியோகத்தருக்குமிடையே பாரம்பரிய, அன்பான மற்றும் மரியாதைக்குரிய உறவை மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்ப உங்களால் முடியும் என்று நம்பி, உங்களின் புதிய தொழில் வாழ்க்கைக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, கடந்த ஆண்டு கிராம உத்தியோகத்தர் சேவையில் புதிய பிரமாண குறிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, கிராம உத்தியோகத்தர் சேவையில் இணையும் முதல் குழுவினர் நீங்களாவீர்கள். அதேபோன்று தகுதிகள் மற்றும் திறமைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் மற்றொரு குழுவினரும் ஆவீர்கள். இந்த இரண்டு காரணங்களினாலும் இன்றைய நாள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக மாறுகிறது. நமது நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பெரும் முயற்சி மேற்கொண்டு வரும் அதேவேளையில், அரசியல் கலாசாரத்தையும் மிகவும் சாதகமான கலாசாரமாக மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சியின் மற்றொரு படியாக இந்நிகழ்வைக் குறிப்பிடலாம்.
இச்சேவையானது கி.மு 4ஆம் நூற்றாண்டு வரை செல்லும் நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன்படி அரச சேவையில் கிராம உத்தியோகத்தர் சேவை எவ்வளவு முக்கியமானது, மரியாதைக்குரியது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். இந்த யுகம் நமக்கு ஒரு சிறப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாட்டின் மக்கள் ஒரு புதிய முறைமை குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டனர். ‘சிஸ்டம் சேஞ்ச்’ எனும் மாற்றத்திற்காக அவர்கள் குரல் கொடுத்தனர். அந்த மாற்றத்திற்காக மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு தருணத்திலேயே நீங்கள் இந்த நியமனங்களைப் பெறுகிறீர்கள். இந்நாட்டு மக்கள் பிரார்த்தித்த அந்த மாற்றத்திற்கு உங்களின் தீவிர பங்களிப்பு தேவைப்படும் தருணம் இதுவாகும். இந்நாட்டின் அனைத்து மக்களின் சார்பாக உங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று நீங்கள் மேற்கொள்ளும் சேவையே எதிர்காலத்தில் வரலாறாக மாறப்போகிறது. அதன்படி வரலாறு புதிதாக எழுதப்படும் ஒரு யுகமாகவும் இது மாறுகிறது.
நமது நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். போருக்காக இரத்தமும் கண்ணீரும் சிந்தினர். பொருளாதார நெருக்கடியின் போது தங்களின் அடிப்படை தேவைகளைக் கூட தியாகம் செய்தனர். அத்தகைய மக்களுக்குக் கடமைக்கும் சேவைக்கும் அப்பாற்பட்ட ஒரு மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துள்ளது. அத்தகையதொரு வாய்ப்பை அண்மையில் ‘டித்வா’ அனர்த்தத்தின் போது நாம் கண்டோம். அந்த அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவிக்கும் அதேவேளையில், அந்த முன்மாதிரியை நீங்களும் பெற வேண்டும் என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
ஒரு ‘சிஸ்டம் சேஞ்ச்’ வேண்டுமென்றால் முதலில் மாற வேண்டியது நாம்தான். தனித்தனியாக மாற வேண்டும். இன்று நியமனம் பெறும் நீங்களும், உங்களது பெற்றோர்கள் உள்ளிட்ட நலன்விரும்பிகளும் இன்று அடையும் மகிழ்ச்சியை, நீங்கள் ஓய்வுபெறும் நாளிலும் அதேபோல் அடைய முடிந்தால், கடமையை விட சமூகப் பொறுப்பை நிறைவேற்றியதாக நீங்கள் திருப்தியடையலாம். பலமான பொருளாதாரம் போன்றே பலமான சமூக அடிப்படையை கொண்ட ஒரு இலங்கையினருக்காக உங்களது சேவையை வழங்குமாறு இன்று நியமனம் பெறும் உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந் நிகழ்வில் மாகாண ஆளுநர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









