‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவுக்கும் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான உலக வங்கி குழுமத்தின் முகாமையாளர் Gevorg Sargsyan தலைமையிலான பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே 13.10.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒக்டோபர் 30 ஆம் திகதி TRACE Expert City வளாகத்தில் நடைபெறவுள்ள ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
உலக வங்கி பிரதிநிதிகள் குழுவினால் இத்திட்டம் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட்டதுடன், உலக வங்கி குழுமத்தின் மேற்படி உலகளாவிய திட்டத்தில் இணையும் தெற்காசியாவின் முதல் நாடு இலங்கை என்பதும், இதுவொரு முக்கிய மைல்கல் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந் நிகழ்வில், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) சிரேஷ்ட உள்நாட்டு அதிகாரி Victor Anthonypillai, செயற்பாட்டு பிரதானி Tomsa Ricardo Rosada Villamer, சிரேஷ்ட பொருளாதார நிபுணர் Felipe F. Dizon மற்றும் சிரேஷ்ட விவசாயத்துறை நிபுணர் அத்துல சேனாரத்ன ஆகியோருடன் ஜனாதிபதி செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி தனுஷ்க பெரேரா, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் ஆர்.ஏ. ருவன் பத்திரண ஆகியோர் கலந்துகொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








