ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் சிகிச்சைச் சேவைகளின் தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துவதுடன், வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தலைமையில், 13.10.2026 அன்று காலை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட முகாமைத்துவ மீளாய்வுக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுமார் ஏழு இலட்சம் மக்களுக்கு சுகாதாரச் சேவைகளை வழங்கும் இந்த வைத்தியசாலையின் தற்போதைய சேவை நிலைமை, வளங்களைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துதல், நோயாளர் பராமரிப்பில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
2019ஆம் ஆண்டு புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலையின் சில கட்டடங்களும் பிரிவுகளும் நோயாளர் பராமரிப்பைத் திறம்பட முன்னெடுப்பதற்குப் பொருத்தமான வகையில் வடிவமைக்கப்படாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை அடையாளம் காண்பதுடன், வைத்தியசாலை வளாகத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான முழுமையான அபிவிருத்தித் திட்டத்தை (Master Plan) தயாரிப்பதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
தற்போது 979 படுக்கைகளைக் கொண்டுள்ள வைத்தியசாலையில், சிறுநீரக நோயாளர்களுக்கான சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய சிறுநீரக சிகிச்சைப் பிரிவொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு (Cath Lab), சட்ட மருத்துவ அதிகாரி அலுவலகம், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, சிறுவர்களுக்கான ஒட்டிசம் சிகிச்சை நிலையம் ஆகியவற்றை நிறுவுவதற்கான தேவைகளும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் பரிசீலிக்கப்படவுள்ளன.
வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல், பழைய அல்லது போதியளவில் இல்லாத மருத்துவ உபகரணங்களுக்குப் பதிலாக நவீன உபகரணங்களை வழங்குதல், ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் விடுதி வசதிகளை மேம்படுத்துதல், போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையான உபகரணங்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவ விநியோகப் பிரிவுடன் (MSD) ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.
கண் சத்திரசிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சத்திரசிகிச்சைகளுக்கான காத்திருப்புப் பட்டியல்களைக் குறைத்து, நோயாளர்களுக்கு உரிய காலத்தில் சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
வைத்தியர்கள், தாதியர்கள், கதிரியக்கவியலாளர்கள், மருந்தாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
சேவைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அமைச்சின் திட்டமிட்ட வேலைத்திட்டத்தின் கீழ் தேவையான மனிதவளத்தைப் படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, ஹம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை வளாகத்தில் ரூ. 640 மில்லியன் செலவில் நிறுவப்பட்டு வரும் லீனியர் ஆக்சிலரேட்டர் (Linear Accelerator) இயந்திரத்தின் நிறுவல் பணிகளையும் பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
அத்துடன், அரச நிதியின் கீழ் ரூ. 240 மில்லியன் செலவில் சிடி சிமுலேட்டர் (CT Simulator) இயந்திரமொன்றையும், மேலும் கணிசமான செலவில் பிராக்கிதெரபி (Brachytherapy) இயந்திரமொன்றையும் அதே வளாகத்தில் நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று இயந்திரங்களும் நிறுவப்படுவதன் மூலம், புற்றுநோயாளர்களுக்கான கதிர்வீச்சுச் சிகிச்சைகளைத் திட்டமிடுதல் மற்றும் வழங்குதல் ஆகியவற்றை மேலும் துல்லியமாகவும் திறம்படவும் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களும் தமது பிரதேசத்திற்கு அருகிலேயே மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு விரிவடையும்.
கூட்டத்தின் பின்னர், பிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் வைத்தியசாலை வளாகத்தில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதுடன், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்வில் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, வைத்தியர் சாலிய சந்தருவன் மதுரசிங்க மற்றும் அதுல வெலதகொட உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள், வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










