களனி குருகுல வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்த அமர்வு கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் நடைபெற்றது.
களனி குருகுல வித்தியாலய மாணவ, மாணவியருக்குப் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த பாடசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்கள், மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக மாணவர்கள் தலைமைத்துவம் தொடர்பில் பல முக்கியமான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இதன் மூலம் அவர்கள் எதிர்காலத் தலைவர்களாக உருவாகுவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், மாணவர் பருவத்திலேயே திறன்களையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்ததுடன், பாரம்பரிய சிந்தனைச் சட்டகத்திற்கு அப்பால் சிந்திப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கைப் பாராளுமன்றத்தின் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சூலா ஹேரத் அவர்கள், பாராளுமன்றம் மற்றும் சட்டவாக்கச் செயற்பாடுகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
களனி குருகுல வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வை ஆரம்பித்து, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். பின்னர், மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சரும் தமது அமைச்சுக்களின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் சபைக்கு விளக்கமளித்தனர்.
இதன்போது, மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் அதிதிகளின் தலைமையில் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவில், களனி குருகுல வித்தியாலய அதிபர் கலாநிதி குசல பெர்னாண்டோ நன்றியுரையாற்றியதுடன், நாட்டின் பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு இலங்கைப் பாராளுமன்றத்தினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய நிகழ்ச்சித்திட்டத் தொடர்கள் குறித்துத் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சித்திட்டத்தில், ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன், ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல, மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் சமந்த மல்லஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









