நாட்டின் பல பகுதிகளில் தற்போது இன்ஃபுளுவென்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அதன் பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொற்றுநோயியல் கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின்படி, கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களாக இன்ஃபுளுவென்சா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் சுமார் 35 சதவீதமானவற்றில் இன்ஃபுளுவென்சா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது பரவி வரும் இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவ சிகிச்சை பெறுவோரில் கணிசமானோர் இன்ஃபுளுவென்சா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுவாக, முறையான சிகிச்சை மற்றும் ஓய்வின் மூலம் இந்நோய் சில நாட்களில் குணமடையக்கூடும் எனவும், இதனால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










