இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், ஆட்சேர்ப்பு மற்றும் பணியமர்த்தல் நடைமுறைகளை மேம்படுத்துதல், தற்போதுள்ள சவால்களுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தென்கொரியாவின் வேலைவாய்ப்பு அனுமதி முறைமையின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள தென்கொரியாவின் மனிதவள அபிவிருத்திச் சேவையின் வேலைவாய்ப்பு அனுமதி முறைமை நிலையத்தின் பணிப்பாளர் லீ ஹே-வொன் இடையே 14.10.2026 அன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தென்கொரியாவின் ஈ-9 வேலைவாய்ப்பு அனுமதி முறைமையின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக லீ ஹே-வொன்னுடன் கலந்துரையாடினேன்.
இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், ஆட்சேர்ப்பு மற்றும் பணியமர்த்தல் நடைமுறைகளை மேம்படுத்துதல், தற்போது காணப்படும் சவால்களுக்குத் தீர்வு காணுதல் மற்றும் ஈ-9 வேலைவாய்ப்பு அனுமதி முறைமையின் கீழ் எதிர்காலத்தில் உருவாக்கக்கூடிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை ஆராய்தல் ஆகிய விடயங்கள் எமது கலந்துரையாடலில் முக்கிய இடம்பிடித்தன.
அத்துடன், கொரியாவின் மனிதவள அபிவிருத்திச் சேவைக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினோம்.
குறிப்பாக, வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துதல், இலங்கைத் தொழிலாளர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்தோம்.
இலங்கைக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தொழிலாளர் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், இலங்கைத் தொழிலாளர்களுக்குக் கூடுதலான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்றார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








