இலங்கைக்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் 22.10.2026 அன்று நடைபெற்ற நெதர்லாந்தின் தேசிய தின வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களின் சார்பில் நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர், அரச குடும்பம், அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு மற்றும் நட்புறவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை – நெதர்லாந்து உறவுகள் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் 1951ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
கடந்த 75 ஆண்டுகளில் அரசியல் கலந்துரையாடல், வர்த்தகம் மற்றும் முதலீடு, அபிவிருத்தி, கலாசாரம், கல்வி, சுற்றுலா மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த உறவுகள் விரிவடைந்துள்ளன.
அரசியல் கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கிய அடித்தளமாக விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஒக்டோபரில் நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனைக் கூட்டத்தின் மூலம், குறிப்பாகக் கடல்சார் மற்றும் கலாசாரத் துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான பொதுவான விருப்பம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 33ஆவது ஆசியான் பிராந்திய மன்றத்துடன் இணைந்து மணிலாவில் இலங்கை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் டொம் பெரெண்ட்சனுக்கும் இடையில் நடைபெற்ற பயனுள்ள சந்திப்பும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
நிலையான கடல்சார் அபிவிருத்தி, கடல் நிர்வாகம், கடல்சார் பாதுகாப்பு, துறைமுக அபிவிருத்தி மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகிய துறைகளில் அறிவு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இரு நாடுகளும் பல்வேறு நன்மைகளைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – நெதர்லாந்து கலாசார ஒத்துழைப்பின் முக்கிய மைல்கல்லாக, நெதர்லாந்தின் ரிக்ஸ் அருங்காட்சியகத்தில் (Rijksmuseum) பாதுகாக்கப்பட்டிருந்த இலங்கை வம்சாவளியுடன் தொடர்புடைய ஆறு தொல்பொருட்கள் 2023 டிசம்பரில் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் மீளக் கையளிக்கப்பட்டன.
இரு நாடுகளும் இணைந்து மேற்கொண்ட தொல்பொருட்களின் பூர்வீகம் தொடர்பான ஆய்வுகளின் மூலம் அவை இலங்கையைச் சேர்ந்தவை என்பது அடையாளம் காணப்பட்டது.
மீளக் கையளிக்கப்பட்ட பொருட்களில் தங்கக் கஸ்தானம், வெள்ளிக் கஸ்தானம், தங்கக் கத்தி, இரண்டு மகத்துவக்குகள் எனப்படும் சுவர்த் துப்பாக்கிகள் மற்றும் லெவ்கே திசாவையின் பீரங்கி ஆகியவை அடங்குகின்றன.
கண்டி இராச்சியத்துடன் தொடர்புடைய இந்தத் தொல்பொருட்கள் காலனித்துவ காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டிருந்ததுடன், இலங்கையின் வரலாறு மற்றும் கலாசார மரபுரிமையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
இந்தத் தொல்பொருட்களை மீளக் கையளித்த நடவடிக்கை, வரலாற்று மரபுரிமைக்கு மதிப்பளித்தல், பரஸ்பர மரியாதை மற்றும் கலாசாரச் சொத்துக்களைப் பொறுப்புடன் பாதுகாத்தல் ஆகியவற்றில் இரு நாடுகளினதும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தச் செயற்பாட்டின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் ஆறு தொல்பொருட்களை இலங்கையிடம் மீளக் கையளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நீண்டகால அபிவிருத்திப் பங்காளியாக விளங்கும் நெதர்லாந்து, விவசாயம், மீன்பிடி, கிராமிய அபிவிருத்தி, நீர் விநியோகம், சுகாதாரம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான முக்கிய சந்தைகளில் ஒன்றாகவும் நெதர்லாந்து காணப்படுகின்றது. நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு நெதர்லாந்தின் நிபுணத்துவம், புத்தாக்கம் மற்றும் முதலீடுகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 – 2028 காலப்பகுதிக்கான நெதர்லாந்தின் சர்வதேச கலாசாரக் கொள்கையின் கீழ், மூலோபாய ரீதியில் கவனம் செலுத்தப்படும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளமைக்கும் இலங்கை தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறையும் இரு நாடுகளின் மக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய துறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் இலங்கைக்கு 23 இலட்சத்து 62 ஆயிரத்து 521 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15.1 சதவீத வளர்ச்சியாகும்.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், 2025ஆம் ஆண்டில் அந்நாட்டிலிருந்து 64,164 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
நெதர்லாந்தில் வாழும் இலங்கையர்களும் இலங்கைக்கு வருகை தரும் நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகளும் இரு நாடுகளின் மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வையும் நட்புறவையும் வலுப்படுத்துவதில் பங்களிப்பு வழங்குகின்றனர்.
இதேவேளை, இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே ஜேக்கப் டி போயர் (Wiebe Jakob De Boer) மற்றும் அந்நாட்டுத் தூதரகத்தின் இராஜதந்திரக் குழுவினர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்குத் தொடர்ந்து வழங்கிவரும் பங்களிப்புக்காகக் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








