தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, “சிறைச்சாலைக்கு ஒரு புத்தகம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தினால் சேகரிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையான புத்தகங்கள் இன்று (26.10.2026) மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் சடாட்சரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், மாநகர ஆணையாளர் என். தனஞ்சயன், பிரதம ஜெயிலர் மோகன்ராஜ், நூலகத் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான துரைராஜசிங்கம் மதன் மற்றும் மட்டக்களப்பு பொது நூலக உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்க பிரதித் தலைவர், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு பொது நூலகம், இராமகிருஷ்ண மிஷன், பள்ளிவாயல்கள், யுனைடெட் புத்தக நிலையம், ராஜா புத்தக நிலையம் மற்றும் சிறைக்கைதிகள் நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் சங்கத்தினால் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள், சிறைக்கைதிகளின் வாசிப்பு மற்றும் அறிவுசார் மேம்பாட்டிற்காக பிரதம ஜெயிலர் மோகன்ராஜிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என். தனஞ்சயன், தற்போதைய சமூகத்தில் இலத்திரனியல் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், சிறைச்சாலையில் உள்ளவர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றுவதற்கு புத்தக வாசிப்பு சிறந்த வாய்ப்பாக அமையும் எனத் தெரிவித்தார். சிறைக்கைதிகளுக்கு பயனுள்ள புத்தகங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் நேரத்தை அறிவுபூர்வமாகவும் ஆக்கபூர்வமாகவும் செலவிட வழிவகுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், “ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது” என்ற கருத்தை நினைவுபடுத்தியதுடன், மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளவர்கள் அறிவுசார் நூல்களை வாசிப்பதன் மூலம் மனரீதியான மாற்றங்களைப் பெற்று, சமூகத்துடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
மேலும், சிறைக்கைதிகளின் அறிவு, சிந்தனை மற்றும் மனநிலையை மேம்படுத்துவதில் வாசிப்புப் பழக்கம் முக்கிய பங்காற்றுவதுடன், அவர்கள் சிறந்த முறையில் சமூகமயப்படுவதற்கும் இத்தகைய முயற்சிகள் உறுதுணையாக அமையும் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.























இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








