ஆசிய அமைதிப் பெருங்கடல் பணமோசடி எதிர்ப்புக் குழுவினால் நடத்தப்படும் இலங்கையின் 3ஆவது பரஸ்பர மதிப்பீட்டு மாநாட்டின் தொடக்க விழா 26.10.2026 கொழும்பு கோல் பேஸ் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நிதிச் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைக் காட்டுவதற்கும், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்கச் செயல்படுவதற்கும் இந்த மதிப்பீடு மிகவும் முக்கியமானது எனப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நிதி நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலைவதும் ஊழலும் ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்குக் கடுமையான அச்சுறுத்தலாக அமைகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், வலுவான நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் சட்டத்தைச் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நிதி அமைப்பின் பாதுகாப்பை உறுதிசெய்து பொதுமக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், உருவாகி வரும் அபாயங்களை எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகப் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
மாநாட்டின் முதல் நாளில், இலங்கையின் AML/CFT தேசியக் குழு, பணிப்படை மற்றும் தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட ஆரம்பக் கலந்துரையாடலில், நாட்டின் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பான அபாய நிலைமைகள், சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய மூலோபாயங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சட்டமா அதிபர் திணைக்களம், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, இலங்கை பொலிஸ், சுங்கம் மற்றும் மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து அபாய மேலாண்மை மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடின.
தீவுகள் ஆராயுங்கள்
இது தவிர, மோசடி மையங்களின் (scam centres) செயல்பாடுகள் மற்றும் மனித கடத்தல் போன்ற புதிய அச்சுறுத்தல்கள், கொழும்பு துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ) சார்ந்த கடல்சார் நிதி அபாயங்கள், மற்றும் நியமிக்கப்படாத நிதி அல்லாத வணிகங்கள் மற்றும் தொழில்கள் (DNFBPs) மற்றும் அரசு சாரா நிறுவனங்களை (NPOs) தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இம் மாதம் 25 முதல் நவம்பர் 06 வரை நடைபெறும் இந்த APG கண்காணிப்பு விஜயத்தின் போது, இலங்கையின் AML/CFT சட்டக் கட்டமைப்பு, தேசிய அபாய மதிப்பீடு (NRA) மற்றும் நிறுவன செயல்பாடுகள் ஆகியவை APG மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
டிஜிட்டல் பொருளாதாரத்தில் நடைபெறும் நிதிப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்த இந்த சர்வதேசத் தரநிலைகள் பெரிதும் பங்களிப்பதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.
இந் நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









