2027 உலக நீர் தினத்தைக் அனுஷ்டிக்கும் வகையில், ஜனாதிபதி செயலகம் மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலகத்தின் ஒருங்கிணைப்பில் ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் கிளீன் ஸ்ரீலங்கா செயலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (கிளீன் ஸ்ரீலங்கா) எஸ். பி. சி. சுகீஸ்வர, கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நதீகா விக்கிரமசிங்க, நீர் வழங்கல் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எல்.எச். கமகே மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் திஸ்னா ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இலங்கையின் நீர் துறை சார்ந்த அனைத்து தரப்பினர்களின் பங்கேற்புடன், 14 இலக்குகளின் கீழ் இந்த ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, நீர் துறை எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் எதிர்கால சவால்களுக்கு கூட்டுத் தீர்வுகளைக் காண்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
ஒருங்கிணைந்த நீர் வள முகாமைத்துவத்தை ஊக்குவித்தல், நீர் துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துதல், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல், அத்துடன் ஆறுகள், குளங்கள், ஈரநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாத்தல் ஆகியனவும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படும் நோக்கங்களாகும்.
அத்துடன், நீர் துறை சார்ந்த வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அமைப்புகளால் ஆற்றப்படும் சிறந்த பங்களிப்புகளை மதிப்பீடு செய்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்படுகிறது.
இதற்கமைய, பிரதான நிகழ்வை 2027 மார்ச் 23 ஆம் திகதி கொழும்பிலுள்ள ‘வோட்டர்ஸ் எட்ஜ்’ ஹோட்டலில் நடத்துவது தொட்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்கு இணையான வகையில் உலக நீர் தினக் கொண்டாட்ட வாரமொன்றைப் பிரகடனப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீர் துறையின் புத்தாக்கம், தொழில்நுட்பம், நிலைபேறான நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும் தேசியக் கண்காட்சியொன்றும் இந்த வேலைத்திட்டத்திற்கு இணையான வகையில் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நீரின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, நீர் முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, கழிவுநீர் முகாமைத்துவம், நீரை மீள்பயன்பாடு செய்தல், பாரம்பரியம் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்து இவ்வேலைத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்.
அத்துறைகளுக்கு அமைவாக தேசிய மட்டத்திலான குழுக்கள் மற்றும் உப குழுக்களை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவற்றின் மூலம் நீர் துறையில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நீர் தினக் கொண்டாட்ட வாரத்தில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் விடயப்பரப்புக்கு உட்பட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய வகையில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளன.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








