இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விவசாய ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, துருக்கியின் விவசாய மற்றும் வனத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி அஹ்மத் பாக்சி (Dr.Ahmet Bağcı) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புச் சந்திப்பு 27.10.2026 அன்று நடைபெற்றது.
இதன்போது, விவசாய அபிவிருத்தி, நவீன விவசாயத் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம், அறிவுப் பரிமாற்றம், திறன் மேம்பாடு உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்சார் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இரு நாடுகளினதும் விவசாயத்துறை நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.
விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல், விவசாயிகளுக்கு ஆதரவளித்தல், நிலைபேறான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களுக்கு இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஈடுபாடுகளை, விவசாயத்துறைக்கு நேரடியான நன்மைகளை வழங்கக்கூடிய நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
இந்த விஜயத்தின்போது, விவசாய ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலம் விவசாயத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமக்கு அன்பான வரவேற்பளித்து, ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டமைக்காகவும், இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்புக்காகவும் கலாநிதி அஹ்மத் பாக்சிக்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தனது நன்றியைத் தெரிவித்தார்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










