ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற VISION நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்ற மாத்தறை புனித சர்வேஷியஸ் கல்லூரி மாணவர்கள்!

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படும் ‘VISION’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாத்தறை புனித சர்வேஷியஸ் கல்லூரி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்ச்சியொன்று 28.10.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் சுமுகமாக உரையாடியதுடன், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் அலுவலக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், உண்மையான செல்வம் என்பது பணம் மற்றும் பௌதிக வளங்களால் மட்டும் அளவிடப்பட முடியாதது எனவும், நல்ல மனப்பான்புகள், நேர்மை மற்றும் மனித நேயத்தையும் அவை கொண்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

புனித சர்வேஷியஸ் கல்லூரியின் பழைய மாணவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், ஆளுமை விருத்தி மற்றும் வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான பண்புகள் குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். வெறும் பாட அறிவோடு நின்றுவிடாமல், நல்ல மனிதப் பண்புகளையும் நேர்மறையான அணுகுமுறைகளையும் வளர்த்துக்கொண்டு, தாம் தேர்ந்தெடுத்த இலக்குகளை நோக்கி அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் பயணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் பங்களிப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்வைக் நினைவுகூரும் வகையில் பாடசாலைக்கு தேவையான புத்தகத் தொகுதியொன்றும், மரக்கன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

தமது பாடசாலை மாணவர்களுக்கு இந்த விசேட வாய்ப்பை வழங்கியமைக்காக நன்றியைத் தெரிவித்த, புனித சர்வேஷியஸ் கல்லூரியின் அதிபர் கெப்டன் சமித குருகுலசூரிய உள்ளிட்ட ஆசிரியர் குழுவினரும் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் செயலாளருக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects