கல்வி, தொழில்சார் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், இலங்கையின் தொழில் அமைச்சு உள்ளிட்ட ஐந்து தரப்புகள் பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் 02.11.2026 அன்று கைச்சாத்திட்டுள்ளன.
தென் கொரியாவின் சாங்வோன் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (Changwon Exhibition Convention Center) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் தொழில் அமைச்சு, தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH Sri Lanka), தென் கொரியாவின் கியோங்சங்நாம்-டோ மாகாண அரசாங்கம் (Gyeongsangnam-do Provincial Government), சாங்ஷின் பல்கலைக்கழகம் (Changshin University) மற்றும் சாச்சியோன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (Sacheon Chamber of Commerce and Industry) ஆகிய ஐந்து தரப்புகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கை மாணவர்களுக்கு தென் கொரியாவில் உயர்கல்வி, தொழிற்பயிற்சி, தொழிற்துறை சார்ந்த பணியாளர் திறன் மேம்பாடு மற்றும் நீண்டகாலக் குடியிருப்பு வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படவுள்ளன.
இலங்கைக்கும் சாங்ஷின் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஏற்கனவே நிலவிவரும் கல்வி ஒத்துழைப்பின் மூலம் இலங்கை மாணவர்கள் தென் கொரியாவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதுடன், கல்வி, தொழில்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், எதிர்கால கூட்டுத் திட்டங்கள், நிறுவனங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் மற்றும் கல்வியிலிருந்து வேலைவாய்ப்பை நோக்கிய கட்டமைக்கப்பட்ட பாதைகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் அடித்தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம், கல்வித்துறை மற்றும் தொழிற்துறையை ஒன்றிணைத்து சர்வதேச தரத்திலான திறன்மிக்க மனித வளத்தை உருவாக்குவதுடன், இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் மேலும் வலுப்படுத்துவதே இந்த ஒத்துழைப்பின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கைக் குழுவிற்கு தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமை தாங்கியதுடன், தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். எம். பியதிஸ்ஸ மற்றும் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் துமிந்த ஜயலத் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
தென் கொரியத் தரப்பில், கியோங்சங்நாம்-டோ கல்வி மற்றும் இளைஞர் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கிம் சியோங்-கியூ, சாச்சியோன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஹ்வாங் தே-பு மற்றும் சாங்ஷின் பல்கலைக்கழகத்தின் ANCHOR திட்டக் குழுப் பணிப்பாளர் லீ ஜே-ஹக் ஆகியோர் பங்கேற்றனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








