வரி செலுத்துவோர் அடையாள இலக்கச் சான்றிதழ் (TIN) இல்லாதவர்கள், வங்கிகளில் புதிய கணக்குகளை ஆரம்பிக்கவும் வாகன வருமானவரி உரிமங்களைப் புதுப்பிக்கவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் தாமதங்களையும் தவிர்க்கும் நோக்கில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே TIN இலக்கத்தைப் பெற்றுள்ள போதிலும், அதற்கான சான்றிதழைக் கைவசம் வைத்திருக்காதவர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தங்களது TIN இலக்கத்தைச் சமர்ப்பித்தால் போதுமானது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்களும், தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம், பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விபரங்களைச் சமர்ப்பித்து குறித்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பதாரர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில், அவர்களுக்கான TIN இலக்கத்தைப் பெற்றுக்கொடுக்க அல்லது அதனைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளைத் தாமதப்படுத்தவோ மறுக்கவோ கூடாது எனவும் நிதி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், கடந்த நவம்பர் முதலாம் திகதி முதல் எட்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TIN சான்றிதழ் தேவைப்படும் நடவடிக்கைகள்:
வங்கி அல்லது நிதி நிறுவனமொன்றில் புதிய கணக்கை ஆரம்பித்தல்.
மோட்டார் வாகன வருமானவரி உரிமத்தைப் புதுப்பித்தல்.
கடன் அட்டையைப் பெற்றுக்கொள்ளுதல்.
கட்டிட நிர்மாணத் திட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல்.
மோட்டார் வாகனமொன்றைப் பதிவு செய்தல்.
காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல்.
வணிக நிறுவனமொன்றைப் பதிவு செய்தல்.
நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்.
எனினும், புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல் மற்றும் வாகன வருமானவரி உரிமங்களைப் புதுப்பித்தல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளுக்கும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏனைய ஆறு நடவடிக்கைகளுக்கும் TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
இலங்கையில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சட்டரீதியாக TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதால் மாத்திரம் ஒருவர் வருமானவரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது எனவும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
ஒருவரின் வருடாந்த வருமானம் 18 இலட்சம் ரூபாவைத் தாண்டினால் மாத்திரமே அவர் வருமானவரி செலுத்த வேண்டிய பொறுப்புக்கு உட்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உடனடியாக TIN இலக்கம் தேவைப்படாதவர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகங்களிலும் அதன் இணையவழி முறைமையிலும் காணப்படும் நெரிசல் குறையும் வரை TIN பதிவை ஒத்திவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







