புதிய கல்விச் மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கு இணையாக, பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், புதிய பாடத்திட்ட மறுசீரமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதலாம் தரத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக, அடுத்த ஆண்டு இரண்டாம் தரம் மற்றும் ஆறாம் தரம் ஆகியவற்றுக்கு புதிய பாடத்திட்ட மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
அதன்பின்னர், குறித்த மாணவர்கள் ஒவ்வொரு தரமாக உயரும்போது புதிய பாடத்திட்ட மறுசீரமைப்பின் கீழ் கல்வி கற்பார்கள்.
அதன்படி, தற்போது முதலாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் ஐந்தாம் தரத்திற்குச் செல்லும் ஆண்டிலேயே, ஐந்தாம் தரத்திற்கான புதிய பாடத்திட்ட மறுசீரமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.
புதிய பாடத்திட்ட மறுசீரமைப்பு க.பொ.த. சாதாரண தரத்தில் 2030ஆம் ஆண்டிலும், உயர்தரத்தில் 2033ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, அடுத்த ஆண்டு முதல் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் முற்பகல் 11.45 மணி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் மற்றும் நான்காம் தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை எனப் புதிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐந்தாம் தரம் முதல் உயர்தரம் வரையிலான வகுப்புகளுக்கான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









