பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அன்டிகுவா மற்றும் பார்புடாவில் 03.11.2026 அன்று நடைபெற்ற பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டின் (CHOGM) உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் பங்கேற்றார்.
ஆரம்ப அமர்வில் மாட்சிமை தங்கிய மன்னர், அன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமர், பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர், முன்னைய தலைமைப் பொறுப்பை வகித்த நாடான சமோவாவின் பிரதமர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.
அன்டிகுவா மற்றும் பார்புடாவின் பிரதமர் தனது தொடக்க உரையில், பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் அளவு எதுவாயினும், அவை அனைத்திலும் உள்ளடங்கிய வளர்ச்சியை (inclusive development) உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், கல்வித் துறையிலான ஒத்துழைப்பு, பெண்களை வலுவூட்டுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் தனது உரையில், மேம்படுத்தப்பட்ட முதலீட்டு மற்றும் வர்த்தக உறவுகளினூடாகப் பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான தொடர்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான திறன்களுடன் இளைய தலைமுறையினரைத் தயார்படுத்துவதற்குத் தொலைதூரக் கல்வியில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், காலநிலை மாற்றத்தின் அதிகரித்து வரும் தாக்கங்கள் குறித்தும், உறுப்பு நாடுகளிடையே ஆயத்த நிலை மற்றும் மீளெழுச்சித் திறனை (resilience) வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வுரைகள், பொதுநலவாய அமைப்பின் பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னெடுப்பதில் கூட்டு நடவடிக்கை, உள்ளடங்கிய வளர்ச்சி, பொருளாதார ஒத்துழைப்பு, மீளெழுச்சித் திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டின.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








