இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் சுமார் 7,000 எலிக் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், எதிர்வரும் மழைக்காலநிலையுடன் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனத் தொற்றுநோயியல் பிரிவும் சுகாதார மேம்பாட்டு பணியகமும் இணைந்து விசேட அறிவித்தலை விடுத்துள்ளன.
இந்த நிலையில், தற்போது பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டில் நிலவும் பருவமழை காலநிலையினால் எலிக் காய்ச்சல் நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாகக் காணப்படுவதாகச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் துஷாரி தப்பரேரா இந்தத் தகவல்களை தெரிவித்தார்.
நாட்டில் பொதுவாக ஒரு வருடத்திற்கு எலிக் காய்ச்சல் நோயினால் சுமார் 300 பேர் வரை உயிரிழக்கின்றனர்.
இந்த ஆண்டில் இதுவரை பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவிலான எலிக் காய்ச்சல் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். குறிப்பாக மழைக்காலங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களிலும் வயல்வெளிகள் மற்றும் சேறு சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு இந்த பக்றீரியா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாகக் காணப்படுகிறது.
லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் என்பது பக்றீரியா மூலம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு தீவிர நோயாகும். எலிகள், மனிதரல்லாத ஏனைய வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளின் சிறுநீர் மூலமாக இந்த பக்றீரியாக்கள் நீர் அல்லது சேற்றில் கலக்கின்றன. இவ்வாறு அசுத்தமடைந்த நீர் அல்லது சேறு, மனித உடலில் உள்ள வெட்டுக்காயங்கள், புண்கள் அல்லது தோலின் இயற்கை வெடிப்புகள் வழியாக உடலுக்குள் நுழைவதன் மூலம் இந்நோய் மனிதர்களுக்குத் தொற்றுகிறது.
எனவே, பெருபோக விவசாயப் பணிகள் மற்றும் வெளிப்புற வேலைகளில் ஈடுபடும் போது நோய் பாதுகாப்பிற்காக உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். வயல் வேலைகள் அல்லது சேறு சார்ந்த பணிகளுக்குச் செல்வதற்கு முன்னர், மருத்துவ ஆலோசனையின் பேரில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை முறையாக உட்கொள்ள வேண்டும். மேலும், சேறு மற்றும் நீருடன் பணியாற்றும்போது பொருத்தமான பாதுகாப்பு காலணிகள் (ரப்பர் பூட்ஸ்) மற்றும் கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
உடலில் ஏதேனும் வெட்டுக்காயங்கள் அல்லது கீறல்கள் இருந்தால், நீர் அல்லது சேற்றில் இறங்குவதற்கு முன்னர் கைகால்களைச் சுத்தமான நீரால் கழுவி, காயத்தில் நீர் புகாதவாறு சரியான உறை கொண்டு நன்றாக மூடிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எலிக் காய்ச்சலின் அறிகுறிகள் பல சந்தர்ப்பங்களில் டெங்கு மற்றும் இன்ஃபுளூயன்சா போன்ற நோய்களின் அறிகுறிகளை ஒத்திருப்பதாக அமையும். ஆகவே, காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலி அல்லது கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, உடனடியாகத் தகுதியான வைத்தியரை நாட வேண்டும்.
நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் கடுமையான சிக்கல்கள் மற்றும் உயிரிழப்புகளை முழுமையாகத் தவிர்க்க முடியும் எனச் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










