மட்டக்களப்பு மாவட்டத்தில் “திரியமன் பெத்த” சிறப்புப் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பெண் பயனாளிகளுக்கான இரு நாள் பயிற்சிநெறி கடந்த 16.11.2026 அன்று பழைய மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், உதவி மாவட்டச் செயலாளர் ஜி.பிரணவனின் மேற்பார்வையில், மாவட்ட மகளிர் அபிவிருத்தி இணைப்பாளர் எஸ்.அருணாளினியின் ஏற்பாட்டில் இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பெண் பயனாளிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதன்போது, கால்நடைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்த்தாக்கங்கள், அவற்றுக்கான அறிகுறிகள் மற்றும் நோய்களைத் தடுக்கும் முறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இப்பயிற்சியின் வளவாளராகக் கலந்துகொண்ட அரச கால்நடை வைத்தியர் சுபாசுகி ரங்கநாதன், பயனாளிகளுக்குத் தேவையான தெளிவூட்டல்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் சிங்கராசா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()




