கொரியக் குடியரசின் உதவியுடனும், கொரியக் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (KIOST) தொழில்நுட்பப் பங்களிப்புடனும் நிறுவப்பட்ட இலங்கை தேசிய கடல்சார் மற்றும் கடற்றொழில் தரவு மையம் (SOFDC), நாரா நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் கடல்சார் அறிவியல், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிலைபேறான கடற்றொழில் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ளது.
இதனூடாக கடற்றொழில் வளங்கள் தொடர்பான அறிவியல் முன்னறிவிப்புகளை வலுப்படுத்துதல், கடல்சார் மற்றும் கடற்றொழில் தரவுகளை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்தல், கடல்சார் சூழலியல் மற்றும் காலநிலை மாற்றங்களைக் கண்காணித்தல், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான கடற்றொழில் முகாமைத்துவத்தை முன்னெடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், கடல்சார் ஆய்வுகளுக்கான டிஜிட்டல் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் இந்த மையத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இலங்கை மீனவ சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மையத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கையளிக்க முடிந்தமை நாரா நிறுவனத்தின் முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்தத் திட்டம் இலங்கை – கொரிய அறிவியல் ஒத்துழைப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் நீலப் பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (21.11.2026) அனுஷ்டிக்கப்படும் உலக கடற்றொழில் தினத்தை முன்னிட்டு, 19.11.2026 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான கொரியத் தூதுவர் யூன் யொங் கிம் (Youn-Jung Kim), கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








