அரச நிர்மாணத்துறை பணிகளின் போது தனியார் நிறுவனங்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, தடைகளை நீக்கி நிர்மாணப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் நோக்குடன் “Builders’ Gateway” நிர்மாணத்துறை வசதியளித்தல் பிரிவு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் 20.11.2026 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இதற்கு இணையாக, https://nbfc.presidentsoffice.gov.lk/ இணையத்தளமும் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய VIYASA தேசிய வணிக வசதியளித்தல் மையத்துடன் இணைந்ததாக இந்த நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு தமது பிரச்சினைகளை Builders Gateway நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் https://nbfc.presidentsoffice.gov.lk/ எனும் Builders Gateway இணையத்தளம் ஊடாகவோ அல்லது info.nbfc@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ முன்வைக்க முடியும்.
அத்துடன் 9411 267 2750 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது 94 77 354 3495 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் (WhatsApp) மூலமோ அனுப்பி வைக்க முடியும். அல்லது C80, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது குறித்த இடத்திற்கு நேரடியாக வருகை தந்தோ சமர்ப்பிக்க முடியும்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வீடமைப்பு, நிர்மாணிப்புத் துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க,
தனியார் நிறுவனங்களே அரசாங்கத்தின் நிர்மாணப் பணிகளை பெருமளவில் முன்னெடுக்கின்றன. இந்த வர்த்தக சமூகத்தினர் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அவர்கள் பல்வேறு அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட பலரைச் சந்தித்துப் பிரச்சினைகளை முன்வைக்கின்றனர்; உதவிகளைக் கோருகின்றனர். சில வேளைகளில் ஜனாதிபதியைக் கூட சந்தித்து பிரச்சினைகளை கூறுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் விரக்தியடைகின்றனர்.
இந்த நிலைமையை மாற்றி, நிர்மாணிப்புத் துறையை மேலும் செயற்திறனாக முன்னோக்கிக் கொண்டு செல்லும் நோக்குடனேயே ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்த நிறுவனம் நிறுவப்படுகிறது.
அதன்படி, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மூலதனச் செலவினங்களுக்காக 2000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும் பகுதி நிர்மாண வசதிகளுக்காகவே ஒதுக்கப்படுகிறது.
எனவே, அடுத்த வருடம் நிர்மாணத் துறையில் பாரிய எழுச்சி கொண்ட ஆண்டாக அமையும். விசேடமாக உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்பும் பணிகள் அடுத்த ஆண்டில் மேலும் துரிதமாக நடைபெறும். இதற்கு அதிக பங்களிப்பை வழங்கும் தனியார் நிர்மாணத் துறை நிறுவனங்கள் தமது பணிகளை மிகவும் இலகுவாகவும் துரிதமாகவும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதே எமது நோக்கமாகும்.
இந்த “Builders’ Gateway” நிறுவனத்தை உருவாக்குவதன் ஊடாக பாரிய அளவிலான நிர்மாணங்கள் தொடக்கம் மிகச் சிறிய நிர்மாணங்கள் வரை அனைத்து நிர்மாணிப்புகளின் போதும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய நிறுவனங்கள் சார்பாக தேவையான தலையீடுகளை இலவசமாகவே வழங்குவதற்கு இந்த நிறுவனம் வழிகளை மேற்கொள்ளும். உங்கள் தேவைக்கேற்ப பிரச்சினை, கோரிக்கை, ஆலோசனை அல்லது முறைப்பாடு என எந்தவொரு வடிவத்திலும் எமக்கு முன்வைக்க முடியும். அவை முன்வைக்கப்பட்டதன் பின்னர், உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மிகவும் இலகுவாக அப்பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பதே இதன் நோக்கமாகும். மாறாக, எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் அழுத்தம் கொடுப்பது இதன் மூலம் நடைபெறாது.
இங்குள்ள மிக முக்கியமான விடயம் என்னவெனில், இந்த “Builders’ Gateway” இன் அதிகாரிகள் குழாமிற்கு தனியார் நிறுவனங்களின் தேவைகள், அதன் பணிகளின் தன்மை போன்றவற்றைப் போலவே அரச நிறுவனங்களின் செயற்பாடுகள், அதன் சட்டதிட்டங்கள், அவை இயங்கும் விதம் அல்லது அரச பொறிமுறை தொடர்பாக மிகச் சிறந்த புரிதல் இருக்க வேண்டும் என்பதாகும். இந்த நிறுவனத்தின் சேவையையும் பெற்றுக்கொண்டு அடுத்த ஆண்டில் நிர்மாணத்துறையில் பாரிய மாற்றம் ஏற்படும் என நாம் நம்புகிறோம்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,
நாம் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த இடத்தில் அரச வணிக வசதியளித்தல் மையத்தை அல்லது வியாசா நிலையத்தை ஆரம்பித்தோம். அது கைத்தொழில் துறையின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும், சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவுமே ஆகும். அதன் மூலம் கைத்தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்ப்பதை அதிகரிப்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
மகிழ்ச்சியுடன் கூறுகிறேன், இதுவரை வியாசா நிலையத்திற்கு 186 பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 150 பிரச்சினைகளை நாம் தற்போது தீர்த்து வைத்துள்ளோம். அதேபோன்று நிர்மாணத் துறையிலும் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்காக பல்வேறு அரச நிறுவனங்களுக்கும் சென்று நீண்ட நேரம் செலவிட வேண்டிய நிலை வர்த்தக சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சில நிர்மாணங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத சூழ்நிலைகள் உருவாகியுள்ளன.
அரச நிர்மாணப் பணிகளை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் தனியார் துறைக்கே உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். அதற்குத் தேவையான பௌதிக மற்றும் தொழில்நுட்ப வசதிகளும், அனுபவமும் அவர்களிடம் அதிகமாக உள்ளன. எனவே, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்த்து, அவர்களுக்கு ஏற்படும் தடைகளைக் கடந்து வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கி, நிர்மாணத் துறையை மிகவும் செயற்திறனாக முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கத்துடன்தான், நாங்கள் இந்த “Builders’ Gateway” நிறுவனத்தைத் ஆரம்பிக்கிறோம்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் குமுதுலால் போகஹவத்த
நமது நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு நிர்மாணம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளிலிருந்து சுமார் 12 சதவீதம் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை மூன்று மடங்காக அதிகரிப்பதே எமது இலக்காகும். எனவே, அந்தத் துறையை மிகவும் முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கும், அதற்காக பங்களிக்கும் தனியார் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் ஒத்துழைப்பு வழங்குவது மிகவும் அத்தியாவசியமான பணியாகும்.
அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரச நிறுவனங்களிடம் முன்வைக்கும்போது, தங்களைப் பாதிக்கும் வரிகளை நீக்குமாறு அவர்கள் கோருவதில்லை. மாறாக, தங்கள் நிர்மாணப் பணியை விரைவாகத் தொடங்கத் தேவையான உதவியை வழங்குமாறே கோருகின்றனர். ஏனெனில், அவர்கள் இதற்காக மிகப்பாரிய தொகையை முதலீடு செய்கின்றனர். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுவது கூட, அதிலிருந்து இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்பை இழக்கச் செய்வதாகும். எனவே, இந்த “Builders’ Gateway” நிறுவனத்தை நிறுவுவதன் மூலம், நிர்மாணத் துறையினரின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கி, நிர்மாணத் துறையில் மிகப்பாரிய வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட
இந்த நிர்மாணத் துறை வசதியளித்தல் பிரிவு, தேசிய வணிக வசதியளித்தல் மையத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது ஜனாதிபதியின் செயலாளரின் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. அதற்காக ஒரு தேசிய செயற்பாட்டுக்குழு உள்ளது. அதன் செயலாளர் ஜனாதிபதியின் செயலாளர் ஆவார்.
அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளடங்கலாக 14 அரச நிறுவனத் தலைவர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர். அதேபோன்று, நிர்மாணத் துறையில் நாம் இனங்கண்டுள்ள 44 வணிக நிறுவனங்கள் உள்ளன. அந்த ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் தலா ஒருவர் வீதம் இணைத்துக்கொள்ளப்பட்ட உப குழு ஒன்றையும் நாம் நியமிக்கின்றோம். அப்போது அவர்களுக்குத் தமது பிரச்சினைகளைக் கலந்துரையாட மேலும் வாய்ப்புக் கிடைக்கும். உங்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் ஏதேனும் பிரச்சினை எழுந்தால் எமக்கு அறியத் தாருங்கள். நாம் அதனை எமது பிரச்சினையாகக் கருதி, அதனைத் தீர்ப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கை என்னவென்று ஆராய்ந்து, உங்களுக்கு அதனைத் தீர்த்துத் தருவோம். அவ்வாறு செய்யும்போது, நாம் அரச நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்தோ, அந்த நிறுவனங்களின் சட்டதிட்டங்களை மீறியோ செயற்பட மாட்டோம்.
மாகா இன்ஜினியரிங் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் பியதாச மதரசிங்க
நிர்மாணத் துறையில் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதை விட, அதனைத் தேசியப் பொருளாதாரத்துடன் எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். அடுத்த ஆண்டில் நிர்மாணத் துறைக்கு 2,000 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இந்த நிதியில் சுமார் ஐந்து சதவீதமான அளவு மட்டுமே நிர்மாணத் துறையினரிடம் தங்குகிறது. மீதிப் பகுதி பல்வேறு துறைகளுக்குச் செல்கிறது. எனவே, இந்த நிதி ஒதுக்கீடு பல துறைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இதற்கு முன்னர் சில சந்தர்ப்பங்களில் ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கான அனுமதிகளைப் பெறுவதற்குச் சுமார் ஆறு வருடங்கள் வரை செலவிட்டுள்ளோம். அதனால், பல்வேறு அரசாங்கங்களிடம் நாங்கள் தொடர்ந்து முன்வைத்து வந்த ஒரு கோரிக்கையும் எமது கனவும் தான் இன்று நிறைவேறியுள்ளது. உறங்கிக் கொண்டிருந்த நிர்மாணத் துறைக்குப் புத்துயிர் வழங்கியமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், மிகவும் நன்றியும் தெரிவிக்கிறோம். நிர்மாணத் துறையினர் சார்பாக நான் உறுதியளிக்கிறேன்; எங்களிடம் ஒப்படைக்கப்படும் திட்டங்களை உரிய நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் கையளிப்போம் என்று.
இந்நிகழ்வில் அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









