மண்சரிவு எச்சரிக்கை குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்!

நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர்ச்சியான கடும் மழைவீழ்ச்சி காரணமாக, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு அவதானமாக இருக்குமாறு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மண் சரிவு எச்சரிக்கை 24.11.2026 அன்று மாலை 4 மணி முதல் இன்று (25.11.2026) மாலை 4 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 24.11.2026 அன்று மாலை 6 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியந்தோட்டை, மாவனல்லை மற்றும் ரம்புக்கனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை தொடருமாயின் இப்பகுதிகளில் மண்சரிவு, மலைச் சரிவுகள் இடிந்து விழுதல், பாறைகள் உருண்டு விழுதல், மண் மேடுகள் சரிதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் ஆகிய அபாயங்கள் ஏற்படக்கூடும் எனத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தேவைப்படின் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமையால், கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects