களனி ஆற்றுப் பகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், நீரேற்று நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக இலங்கைக்கு சுமார் 456 கோடி ரூபாய் (2.179 பில்லியன் ஜப்பானிய யென்) நிதியுதவியை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.
இதற்கான பரிமாற்றக் குறிப்புகள் மற்றும் நிதியுதவி ஒப்பந்தம் கடந்த 28.10.2026 அன்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும், ஜப்பான் அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டாவும் பரிமாற்றக் குறிப்புகளில் கைச்சாத்திட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நிதியுதவி ஒப்பந்தத்தில் அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) இலங்கைக்கான பிரதம பிரதிநிதி ஷிகியோ ஹொன்சுவும் கைச்சாத்திட்டனர்.
ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், JICA ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
வத்தளை மற்றும் பேலியகொடை பகுதிகளை உள்ளடக்கிய முதுன் எல உப வடிநிலப் பகுதியில், கனமழை மற்றும் களனி ஆற்றின் நீர்மட்ட உயர்வு காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் கீழ், நொடிக்கு 15 கனமீற்றர் நீரை வெளியேற்றும் திறன் கொண்ட புதிய நீரேற்று நிலையம் அமைக்கப்படவுள்ளது.
அத்துடன், நீர்மட்டத்தைக் கண்காணித்து நீரேற்று நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நவீன SCADA தொழில்நுட்பக் கட்டமைப்பும் நிறுவப்படவுள்ளது.
களனி ஆற்றின் நீர்மட்டம் உயரும்போது மழைநீரை விரைவாக வெளியேற்றுவதன் மூலம் வெள்ள அபாயத்தைக் குறைத்து, அப்பகுதிகளின் வடிகால் வசதிகளையும் வெள்ள முகாமைத்துவத்தையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் குடியிருப்புப் பகுதிகள், வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்புகளை வெள்ளத்தால் ஏற்படும் சேதங்களிலிருந்து பாதுகாப்பதுடன், நகர்ப்புற வாழ்வாதாரங்களையும் பொருளாதார நடவடிக்கைகளையும் பாதுகாக்க உதவும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வர்த்தகம், தளவாடங்கள் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய மையமாக விளங்கும் பேலியகொடைப் பகுதியின் அபிவிருத்திக்கும் இத்திட்டம் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்துவதுடன், கொழும்பு பெருநகரப் பிராந்தியத்தின் வெள்ள முகாமைத்துவத்தையும் மேம்படுத்த இத்திட்டம் பங்களிக்கும்.
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, அனர்த்த இடர் முகாமைத்துவம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவின் மற்றுமொரு முக்கிய கட்டமாக இந்த நிதியுதவி அமைவதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








