மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 950 தொடக்கம் 1,000 ரூபாய் வரையிலும், கத்தரிக்காய் 500 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 800 ரூபாய்க்கும், போஞ்சி 450 ரூபாய்க்கும், கரட் 600 தொடக்கம் 700 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
அத்துடன், பூசணிக்காய் (வட்டக்காய்) 400 ரூபாய்க்கும், வாழைக்காய் 400 ரூபாய்க்கும், கோவா 600 தொடக்கம் 650 ரூபாய் வரையிலும், வெள்ளரிக்காய் 350 ரூபாய்க்கும், தக்காளி 800 ரூபாய்க்கும், பாகற்காய் 800 ரூபாய்க்கும், புடலங்காய் 600 ரூபாய்க்கும், நுவரெலியா உருளைக்கிழங்கு 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும், ஒரு கிலோகிராம் தேசிக்காய் 2,000 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 800 ரூபாய்க்கும் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பெய்த பலத்த மழை காரணமாக மரக்கறிப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், கேள்விக்கு ஏற்ற நிரம்பலை வழங்க விவசாயிகளால் முடியாமல் போயுள்ளமையே இந்த விலையேற்றத்திற்குக் காரணம் என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளமையால் நுகர்வோர் மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதைக் குறைத்துள்ளதாகவும், இதனால் தமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பிரதேச மரக்கறி வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










